Published : 25 Feb 2021 05:02 PM
Last Updated : 25 Feb 2021 05:02 PM
சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நீரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை, எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை என பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிய, நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான, ரூ.1,350 கோடி மதிப்புள்ள, 2,300 கிலோ தங்க, வைர நகைகளை அமலாக்கத்துறையினர் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அதுபோலவே, மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கி உள்ளது.
நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நிரவ் மோடி லாவேசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு, சென்றவர் பின்னர் நாடு திரும்பிவில்லை. லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டன் போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
மோசடியில் தொடர்புடைய அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரையும் இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான முயற்சிகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சட்ட ரீதியாக ஈடுபட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இறுதி விசாரணை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை விசாரணை ஜனவரியில் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி சாமுவேல் கூஸ் தனது தீர்ப்பில் கூறியதாவது:
‘‘நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு என்ற ஆதாரமும் இல்லை. இந்தியாவில் நீதி விசாரணை சுதந்திரமானது. நாடுகடத்தப்பட்டால் நீரவ் மோடி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என இந்திய அரசு உறுதியளித்துள்ளது.
இதனை நீதிமன்றம் ஏற்கிறது. சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நீரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை.’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT