Published : 25 Feb 2021 08:29 AM
Last Updated : 25 Feb 2021 08:29 AM
மோடேரா கிரிக்கெட் மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு ரிலையன்ஸ் முனை, அதானி முனை என பெயர் வைத்ததன் மூலம் உண்மை அழகாக வெளிவந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோடேரா ஸ்டேடியம் புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் 1.10 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி விளையாட்டரங்கம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று இந்த அறிவிப்பு வெளியானது.
ஏற்கெனவே ‘சர்தார் வல்லபாய் படேல் மைதானம்’ எனப் பெயரிடப்பட்டிருந்த மைதானம், ‘நரேந்திர மோடி மைதானம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு, ரிலையன்ஸ் முனை எனவும், அதானி முனை எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோடி அரசு பெருநிறுவனங்களின் முதலாளிகளுக்காகச் செயல்பட்டு வருவது வெளிப்படையாக அம்பலமாகிவிட்டதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “உண்மை தன்னை எவ்வளவு அழகாக வெளிகொண்டு வந்துள்ளது. நரேந்திர மோடி மைதானம். ரிலையன்ஸ் முனை (RELIANCE END), அதானி முனை (ADANI END), ஜெய்ஷா தலைமை வகிக்கிறார். #HumDoHumareDo (நாம் இருவர், நமக்கு இருவர்)” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT