Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM
முதலீடு மற்றும் பொதுச் சொத்து நிர்வாகத் துறை (டிஐபிஏஎம்) நேற்று நடத்திய காணொலி கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:
பல்வேறு துறைகளில் தனியார் துறையை நுழைப்பதன் மூலம் நாட்டில் முதலீட்டைக் கொண்டு வர முயற்சிக்கிறோம். இதற்காக பட்ஜெட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்தோம். பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் அவை இயங்கி வருகின்றன. அவற்றை தனியார்மயமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் அரசு நிறுவனங்களை சொந்தமாக வைத்து நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை.
தனியார் துறையினரால் சிறப்பாக செயல்பட்டு, நிறுவனங்களை பரிமளிக்க வைக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஏராளமான வேலைவாய்ப்புகளை அந்த நிறுவனங்கள் உருவாக்கும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் கிடைக்கும் நிதியிலிருந்து பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். நான்கு முக்கிய துறைகள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். முன்னதாக ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘விவசாயிகளின் ஆர்வம், உறுதியால் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அளிக்கும் பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. விவசாயிகள் கடன் வாங்கக்கூடாது என்ற நோக்கில் இந்தத் தொகை வழங்கும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம்’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT