Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM
மீனவர் நலனுக்காக தனியாக மீன்வளத் துறை அமைச்சகம் தேவை என்று வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் புதுச்சேரிக்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். மீனவர்களுடன் அவர் பேசும்போது, "நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்'' என்றார்.
இதையடுத்து மீனவர்கள் நலனுக்கான மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்கெனவே இருப்பது கூட தெரியாமல் ராகுல் காந்தி மீனவர் மத்தியில் உளறி வருகிறார் என பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதை மேற்கோள்காட்டி மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
அதில் மத்திய அரசு கடந்த 2019 மே 31-ம் தேதியே மீன்வளத் துறைக்கு புதிய அமைச்சகத்தை உருவாக்கியது என்பதை ராகுல் காந்தி அறிந்து கொள்ள வேண்டும். இந்த அமைச்சகம் மூலம் மீனவர்களுக்கு இதுவரை ரூ.3,683 கோடியை அரசு செலவிட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கேரள மாநிலத்துக்கு வந்துள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கொல்லம் அருகிலுள்ள தங்கச்சேரி கடற்கரைப் பகுதியில் மீனவர்களுடன் நேற்றுஉரையாடினார். அப்போது அவர்கூறும்போது, “மீனவர்கள் நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இன்று காலை நான் மீனவ சகோதரர்களுடன் கடலுக்குள் சென்றேன். நான் பாதுகாப்பாக கரைக்குத் திரும்பி வரும் வரையில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் கஷ்டப்பட்டு கடலில் மீன்பிடித்தால் அதற்கானபலனை வேறு யாரோ அனுபவிக்கிறார்கள். விவசாய மக்களுக்காக மத்திய அரசு வேளாண் துறையைஉருவாக்கி உள்ளது. ஆனால் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் இல்லை. டெல்லியில் உள்ளவர்கள் உங்களைப் பற்றி பேசமாட்டார்கள். உங்களுக்காக நான் போராடி தனி அமைச்சகம் உருவாக்குவேன்" என்றார்.
முன்னதாக கொல்லம் வாடி கடற்கரையிலிருந்து மீனவர்களுடன் அவர்களது படகில் ராகுல் காந்தி சிறிது தூரம் கடல் பயணம் மேற்கொண்டார். அப்போது வலை வீசி மீன்களையும் அவர் பிடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT