Published : 16 Nov 2015 06:49 PM
Last Updated : 16 Nov 2015 06:49 PM
டெல்லியிம் டிவி வியாபாரி ஒருவர் ரூபாய் பத்து கோடி மதிப்புள்ள ‘வாட்’ வரியை கட்டாமல் ஏமாற்றியதாக தெரிய வந்துள்ளது. இவரது கடையில் நடத்திய சோதனையில் ரூபாய் 50 கோடி மதிப்புள்ள எல்.ஈ.டி தொலைக்காட்சிப் பெட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
டெல்லியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டப்படி, வருடம் ஒன்றுக்கு ரூபாய் 20 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்பவர்கள் அரசிற்கு வாட் வரி கட்ட வேண்டும். அம் மாநிலத்தின் முதல் அமைச்சராக அர்விந்த் கேஜ்ரிவால் அமர்ந்த பின் வாட் வரி வசூல் வெகுவாகக் குறைந்து விட்டதாகக் கூறப்பட்டது. இதற்கு, டெல்லியில் பல வியாபாரிகள் வாட் வரி கட்டாமல் அரசை ஏமாற்றி வருவது காரணம் எனக் கூறப்படுகிறது
இதனால், தம் உளவு பிரிவு அளித்தத் தகவல்களின் அடிப்படையில் டெல்லியின் வியாபாரம் மற்றும் வரித்துறை சார்பில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. இந்தவகையில், நேற்று மாலை, மத்திய பகுதியில் உள்ள முக்கியமான வியாபார தலமாக இருப்பது கரோல் பாக்கில் நடத்தப்பட்ட சோதனையில் அதன் ஒரு வியாபாரி ரூபாய் 10 லட்சம் மதிப்பில் வாட் வரி கட்டாமல் ஏமாற்றி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எல்.ஈ.டி தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்து வந்தவர். இவரிடம் அரசு அனுமதி பெறாமல் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50 கோடி மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து அத்துறையின் ஆணையரான எஸ்.எஸ்.யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பல கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபாரம் செய்யப்பட்டு வந்தும் அந்த நிறுவனம் வாட் துறையில் பதிவு செய்யப்படாமல் இருந்திருக்கிறது. இந்த நிறுவனம் இவர் சட்டவிரோதமாக செய்து வந்த வியாபாரம் மீது நடந்த சோதனையில் வாட் சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த வேறு சில தகவல்கள் சம்மந்தப்பட்ட துறைகளிடம் பறிமாறப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தார்.
இதுபோல், டெல்லி அரசிற்கு வாட் வரி ஏமாற்றும் நிறுவனங்கள் சிக்குவது முதன் முறையல்ல. கடந்த மாதம் இத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாட் வரியை அரசிற்கு கட்டாமல் ஏமாற்றியதாக 150 நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் அமைந்து செயல்பட்டு வந்தன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT