Published : 24 Feb 2021 05:15 PM
Last Updated : 24 Feb 2021 05:15 PM
ராகுல் காந்தியின் பேச்சு வெறுப்பு அரசியலை காட்டுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் 3 முறை எம்.பி.யாக ராகுல் காந்தி இருந்துள்ளார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்டார். எனினும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசுகையில் ‘‘ என்னுடைய அரசியல் பயணத்தில் முதல் 15 ஆண்டு காலம் நான் வடக்கே எம்.பி.யாக இருந்தேன். ஆகையால், நான் வேறுவிதமான அரசியலுக்குப் பழகியிருந்தேன். திடீரென கேரளாவுக்கு அரசியல் பயணம் மாறுதலானது புத்துணர்வைத் தந்தது. கேரள மக்கள், சமூக பிரச்சினைகள் மீது மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். கேரள மக்கள் அரசியலை நுட்பமாக அணுகின்றனர்’’ என பேசினார்.
தற்போது இந்த விவகாரம் ஆளும் பாஜக கையில் எடுத்துள்ளது. பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வயநாட்டில் வென்ற ராகுல், தற்போது 3 முறை வெற்றி பெற்ற வட இந்தியாவை தாழ்த்தியும், தற்போது வென்ற கேரளாவை உயர்த்தியும் பேசி பிரிவினையைத் தூண்டுவதாக பாஜக விமர்சித்து வருகிறது.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அமேதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வட இந்தியா, தென்னிந்தியா என நாட்டை பிளவுபடுத்த முயலுவதாக ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் ‘‘இது மோசமான அரசியல். இதுபோன்ற வெறுப்பு மற்றும் பழிவாங்கும் அரசியல் போக்கு கண்டிக்கத்தக்கது. அமேதி மக்களை மட்டும் ராகுல் அவமானப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த தேசத்தையும் இரண்டாக அவர் பிரித்து விட்டார். ஒவ்வொரு பொதுமக்களும் இந்த நாட்டின் குடிமக்கள். இதனை ராகுல் காந்தி உணர வேண்டும். இதுபோன்ற மோசமான அரசியலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கிறோம்.’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT