Published : 24 Feb 2021 09:11 AM
Last Updated : 24 Feb 2021 09:11 AM
முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்துமாறு கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த்யுள்ளது.
இதுதொடர்பாக, மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர் மாநில நிர்வாகங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை புதிதாக அதிகரித்து வரும் மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்கலில் சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6000 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. புனே, நாக்பூர், மும்பை புறநகர்ப் பகுதி, அமராவதி, தானே, அகோலா மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இங்கெல்லாம் தடுப்பூசிப் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களில் சராசரி 2 மடங்காக உயர்ந்துள்ளதால் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் இந்தோர், போபால், பீடுல் மாவட்டங்கள் தொற்று பரவும் மாவட்டங்களாக அறியப்பட்டுள்ளன. பஞ்சாபில் எஸ்பிஎஸ் நகர், கபுர்தலா, ஸ்ரி முக்த்ஸா சாஹிப் பகுதிகள், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புல்வாமா மாவட்டமும், சத்தீஸ்கரில் ராஜ்நத்காவோனும் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் பகுதிகளாக உள்ளன.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி முதற்கட்ட பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. 3 கோடி சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி என்ற இலக்குடன் பணி தொடங்கியது. ஆனால், இதுவரை 1.19 கோடி மக்கள் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளனர். இந்நிலையில், மார்ச் மாத மத்தியில் இரண்டாம் கட்ட தடுப்பூசி பணி தொடங்கவிருக்கிறது. இதில் 50 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இல்லாதோருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் 240 வகையிலான உருமாறிய கரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா கோவிட் தடுப்புக் குழு தெரிவித்திருக்கிறது. ஆனால், புதிய உருமாறிய வைரஸ் காரணமாகவே தொற்று எண்ணிக்கை மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கிறதா என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர் போல் கேரளா, தெலங்கானாவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT