Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM
கடுங்குளிர் பிராந்தியமான லடாக்கில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் சூரிய ஒளியில் மின்னுற்பத்தி செய்து கதகதப்பாக வைக்கும் கூடாரத்தை சோனம் வாங்சுங் உருவாக்கியுள்ளார்.
பாலிவுட் திரைப்படமான 3 இடியட்ஸ் கதைக்களத்துக்கு மூலக் காரணமாக அறியப்பட்டவர் சோனம் வாங்சுங். இவர் லடாக் போன்ற கடுங்குளிர் பிராந்தியத்தில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையிலான கூடாரத்தை வடிவமைத்துள்ளார். இது எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் 30 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இந்தக் கூடாரத்தில் ஒரே நேரத்தில் 10 ராணுவ வீரர்கள் தங்க முடியும்.
இந்தக் கூடாரம் உறைபனி நிலை 0 முதல் மைனஸ் 14 டிகிரி வரையிலான குளிர் நிலவும் பிராந்தியங்களில் பயன்படுத்த மிகவும் ஏற்றது.
குளிரைத் தாக்குப்பிடிக்க ராணுவ வீரர்கள் மரக்கட்டை களுக்கு தீ மூட்டி அதிலிருந்து கிடைக்கும் வெப்பம் மூலம் இப்பிராந்தியத்தில் தங்குவர். ஆனால் இந்தக் கூடாரம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மரக்கட்டைகளை எரிப்பதன் மூலம் உருவாகும் கரியமில வாயு வெளியேற்றமும் தடுக்கப்பட்டு சுற்றுச் சூழல் பாதிப்பும் குறைய வழி ஏற்பட்டுள்ளது.
சோனம் வாங்சுங்கின் இந்த முயற்சியை மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார். எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு உதவும் உங்களது முயற்சிக்கு தலை வணங்குகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1966-ம் ஆண்டு பிறந்த சோனம் வாங்சுங், பொறியியல் பட்டம் பெற்றவர். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவது, கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வருவது என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பரவலாக அறியப்பட்டவர். லடாக் பிராந்தியத்தில் லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (செம்கோல்) என்ற அமைப்பை 1988-ம் ஆண்டு உருவாக்கி அதன் மூலம் பல பணிகளை மேற்கொண்டுள்ளார். சூரிய ஆற்றலில் இயங்கும் ஒரு வளாகத்தை செம்கோல் என்ற பெயரில் இவர் உருவாக்கியுள்ளார். 1994-ம் ஆண்டு அரசுடன் இணைந்து கிராம சமுதாய அமைப்பை உருவாக்கி அரசு பள்ளி செயல்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT