Published : 01 Nov 2015 09:47 AM
Last Updated : 01 Nov 2015 09:47 AM
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார், லாலுவின் மெகா கூட்டணி வெற்றி பெறுவதை சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மெகா கூட்டணி வெற்றியால் வரவருக்கும் உ.பி. தேர்தலில் தாம் மீண்டும் வெற்றி பெறுவது சிக்கலாகி விடும் என அவர் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, ஜனதாவில் இருந்து பிரிந்த ஒன்பது கட்சிகள் மீண்டும் ஒன்றிணையும் முயற்சியில் இறங்கின. இதன் தலைவராக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கை முன்னிறுத்தினர். எனினும், ஒன்றிணைந்து உருவாகும் புதிய கட்சியால் சின்னம், கொடி, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் போன்ற தனித்துவத்தை தங்கள் கட்சிகள் இழக்கும் என அதன் உறுப்பினர்கள் அஞ்சினர். இதனால் பாஜகவை எதிர்த்து உருவான ஜனதா பரிவாரம், பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முழுமையாகப் பிரிந்தது. இதற்கு அதன் முக்கியத் தலைவரான முலாயம், தங்களுக்கு போதிய தொகுதி வழங்கவில்லை என்று வெளியேறியதே காரணம்.
பிஹார் தேர்தலில், சமாஜ்வாதி தலைமையில் தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார் முலாயம். ஆனால் அம்மாநிலத்தின் ரோத்தாஸ் நகர மேடையில் பிரச்சாரம் செய்தபோது, பாஜக தலைமைக்கே வெற்றி எனக் கருத்து தெரிவித்து இருந்தார். இதை கண்டித்து அவரது கூட்டணியின் முக்கிய உறுப்பினரான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வெளியேறியது.
பிஹாரில் நடைபெறும் ஐந்து கட்ட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணிக்கு இடையே நேரடி மோதல் நிலவுகிறது. இதில் ஒருவேளை மெகா கூட்டணிக்கு வெற்றி கிடைத்தால் அது தன்னை அதிகம் பாதிக்கும் என எண்ணுகிறார் முலாயம். இதன்மூலம், தம்மிடம் உள்ள மதச்சார்பற்ற அரசியல் கட்சி தலைவர் என்ற பெயரை, நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் தட்டிச் சென்று விடுவார்கள் என அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதனால் மெகா கூட்டணி தோல்வி அடைவதையே முலாயம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் சமாஜ்வாதி கட்சியின் நிர்வாக வட்டாரங்கள் கூறும்போது, “சிறந்த மதநல்லிணக்கவாதி எனும் பெயரை முலாயம் இழப்பதால் அவருக்கு உ.பி.யின் முஸ்லிம் வாக்குகள் கிடைப்பதில் சிக்கலாகி விடும். பிஹாரில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை எனில், உ.பி. தேர்தலையொட்டி மதவாத நடவடிக்கைகளில் பாஜக அதிகம் ஈடுபடும் என அஞ்சுகிறோம். பிஹாரின் முடிவால் ஏற்படும் அரசியல் மாற்றத்தில் உ.பி.யில் 2017-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது கடினமாகிவிடும் என கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் முலாயம் அச்சம் தெரிவித்து வருகிறார்” என்று கூறுகின்றனர்.
நாட்டின் பெரிய மாநிலமான உ.பி.யில் அதிக அளவில் இருக்கும் முஸ்லிம் வாக்குகளை பெற்று இங்கு முலாயம் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து உ.பி.யிலும் ஆட்சி அமைக்க முடியும் என அம் மாநிலத்தில் பாஜக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
இதனால், 2017-ல் நடைபெறவுள்ள உ.பி. தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்பாக பிஹாரில் கிடைக்கும் வெற்றியால் உ.பி.யில் நல்ல பலன் கிடைக்கும் எனவும் பாஜக நம்புகிறது. உ.பி.யில் பாஜக, சமாஜ்வாதி கட்சியுடன் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் வலுவான கட்சியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT