Published : 23 Feb 2021 10:23 AM
Last Updated : 23 Feb 2021 10:23 AM
விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப் நகரசபைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக பலன் அடைந்துள்ளது. இங்கு சிரோமணி அகாலி தளம், பாஜகவை விட வேகமாக வளர்ந்து வந்த ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிந்த நகரசபைத் தேர்தலில் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையில் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸுக்கு அதிக பலன் கிடைத்துள்ளது. இக்கட்சி 2,165இல் போட்டியிட்டு 1,399 வார்டுகளில் வென்றுள்ளது. இங்குள்ள எட்டு முனிசிபல் கார்ப்பரேஷன்களின் மேயர் பதவிகளில் 6 காங்கிரஸுக்கு கிடைத்துள்ளன. இது டெல்லியில் மத்திய அரசிற்கு எதிராக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தின் பலனாகவும் கருதப்படுகிறது. இதன் முடிவுகளால் அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இது, டெல்லியை அடுத்து பஞ்சாப்பில் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து வந்தது.
டெல்லியில் 2013இல் முதன்முறையாக ஆட்சி அமைத்தது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. அடுத்து 2014 மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் போட்டியிட்டது. இதில் அக்கட்சிக்கு பஞ்சாப்பில் மட்டுமே மூன்று எம்.பி.க்கள் கிடைத்தனர். மற்ற மாநிலங்களில் படுதோல்வியால் தொடர்ந்து வந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் விலகி இருந்தது.
ஆனால், பஞ்சாப்பில் மட்டும் போட்டியிட்டதில் 20 எம்எல்ஏக்களுடன் இரண்டாவது பெரும் கட்சியாக வளர்ந்தது ஆம் ஆத்மி. பஞ்சாப்பில் அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 100இல் வெற்றி பெறுவதாகவும் கூறிவந்தது.
எனினும் இந்த நகரசபைத் தேர்தலில் 100 வேட்பாளர்கள் கூட ஆம் ஆத்மியினரால் வெற்றி பெற முடியவில்லை. இக்கட்சி போட்டியிட்ட 1,606 வார்டுகளில் 2.5 சதவிகித வாக்குகளுடன் ஆம் ஆத்மிக்கு வெறும் 60இல் வெற்றி கிடைத்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏவான கன்வார் சாந்து கூறும்போது, ”நகரசபைத் தேர்தலுக்கான அடிப்படைப் பணிகளைக் கட்சி செய்யவில்லை. இதில் போட்டியிடும் முடிவு கடைசி நேரமாகக் கடந்த டிசம்பரில்தான் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கட்சியின் உட்பூசலால் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தது போல் நகரசபைத் தேர்தலில் ஆகிவிட்டது. இதற்குக் கட்சியிலிருந்து 7 எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டது உள்ளிட்டவை காரணங்களாயின. இதன் தாக்கம் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, பஞ்சாப்பில் 14 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் சிரோமணி அகாலி தளம் மற்றும் 3 எம்எல்ஏக்களின் பாஜகவிற்கு ஆம் ஆத்மியை விட அதிக வார்டுகளில் வெற்றி கிடைத்துள்ளது.
அகாலி தளம் 257 வார்டுகளிலும் அதன் முன்னாள் கூட்டணியான பாஜக 49 வார்டுகளிலும் வென்றுள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இக்கட்சிகள், விவசாயப் போராட்டத்தால் பிரிந்திருப்பது நினைவுகூரத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT