Last Updated : 23 Feb, 2021 09:03 AM

22  

Published : 23 Feb 2021 09:03 AM
Last Updated : 23 Feb 2021 09:03 AM

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு பொய்களின் மூட்டை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விளக்கம் தரமுடியுமா?- திரிணமூல் காங்கிரஸ் கேள்வி

பிரதமர் மோடி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன்: கோப்புப் படம்.

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்களின் மூட்டைகள். விவசாயிகள் பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதற்கு முதலில் விளக்கம் அளிக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி இந்த மாதத்தில் 2-வது முறையாக மேற்கு வங்கத்துக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கமிஷன் அரசு. அனைத்துப் பணிகளுக்கும் கமிஷன் எதிர்பார்க்கிறது. மேற்கு வங்கத்தில் தொழில்துறை நசிந்துவிட்டு, வேலையின்மை அதிகரித்துவிட்டது. மக்களின் வாழ்வாதாரம் குறைந்துவிட்டது" குற்றச்சாட்டு கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், "மக்களின் வாழ்வாதாரம் குறைந்துவிட்டதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு மக்களின் சராசரி வருமானம் ரூ.51,543 ஆக இருந்தது. ஆனால், 2019-ல் ரூ.1.09 லட்சமாக உயர்ந்துள்ளது.

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை மேற்கு வங்கத்தில் 89 லட்சம் சிறு தொழில்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2012-ல் 34.60 லட்சம் சிறு தொழில்கள்தான் இருந்தன. 1.32 கோடி மக்கள் சிறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

பிஎம் கிசான் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். உண்மையில் மேற்கு வங்க அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குகிறது. ஆனால், பிஎம் கிசான் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.1,214 வழங்கப்படுகிறது.

ஸ்வஸ்தியா சாதி எனும் திட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் மக்கள் பயன்பெறுகிறார்கள். அனைத்துச் செலவுகளையும் அரசு ஏற்றுக்கொண்டது.

குடிநீர் வசதி வழங்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மத்திய அரசு இதுவரை ரூ.1700 கோடிதான் வழங்கியுள்ளது. ஆனால், மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்க மம்தா பானர்ஜி அரசு ரூ.58 ஆயிரம் கோடி மாநிலம் முழுவதும் குழாயில் குடிநீர் கிடைக்கச் செலவிட்டுள்ளது.

துர்கா பூஜை நடத்த மம்தா அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 2020-ம் ஆண்டு துர்கா பூஜையின்போது ஒவ்வொரு பூஜா மண்டலுக்கும் ரூ.50 ஆயிரம் நிதியுதவியை மம்தா அரசு வழங்கியது.

பிரதமர் மோடியின் பேச்சு பொய்களின் மூட்டை. உண்மையை ஆய்வு செய்யவில்லை'' என்று டெரிக் ஓ பிரையன் தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், "திரிணமூல் காங்கிரஸ் கட்சியைக் கேள்வி கேட்கும் முன் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏன் தடுக்கவில்லை என்பதற்கான காரணத்தைப் பிரதமர் மோடி விளக்க வேண்டும். விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க ஏன் முயற்சி எடுக்கவில்லை என்பதையும் விளக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x