Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
ராணுவத்தில் இணைய காஷ்மீர் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 40,000 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதன்காரணமாக எழுந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அங்கு முழுமையான இயல்பு நிலை திரும்பியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டில் 421 தீவிரவாதிகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 270 தீவிரவாதிகள் மட்டுமே செயல்படுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் அடுத்த 5 ஆண்டுகளில் 80 சதவீத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறோம் என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாசூளுரைத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக ராணுவத்தின் சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ராணுவம் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையில் இணைய இளைஞர்களுக்கு ஆலோசனை, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கரோனாவால் எழுந்த நெருக் கடிக்குப் பிறகு காஷ்மீரில் தற்போது ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து லெப்டினென்ட் ஜெனரல் தேவேந்தர் ஆனந்த் கூறும்போது, "ஜம்மு பிராந்தியத்தின் 10 மாவட்டங்களில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. கடந்த 15-ம் தேதி தொடங்கி வரும் மார்ச் 6-ம் தேதிவரை முகாம்களை நடத்த உள்ளோம். ராணுவத்தில் இணைய இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் 62 சதவீத முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அந்த மாவட்டத்தில் இருந்து ராணுவத்தில் சேர ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதத்தை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து வருகின்றனர் என்று ராணுவ வட்டாரங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்று முன்தினம் ராணுவஅதிகாரிகள், காஷ்மீர் இளைஞர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். தீவிரவாதம் உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் இளைஞர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். ஒவ்வொருவரின் கேள்விக் கும் மேஜர் ஜெனரல் ரஷீம் பாலி தலைமையிலான அதிகாரிகள் தெளிவான விளக்கம் அளித்தனர். ராணுவத்தின் இந்த புதிய முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT