Published : 22 Feb 2021 07:15 PM
Last Updated : 22 Feb 2021 07:15 PM
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக அறிமுகப்படுத்திய கரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது என்பது பொய்யானது இதற்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கரோனாவில் மருந்து கரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகிறது, சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தி மருந்தாகச் செயல்படுகிறது எனக் கூறி கடந்த சனிக்கிழமை பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் பாபா ராம்தேவுடன் மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன், நிதின்கட்கரி பங்கேற்று அறிமுகம் செய்து வைத்தனர்.
அப்போது யோகா குரு பாபா ராம்தேவ் பேசுகையில் " கரோனா வைரஸுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட கரோனில் மருந்துக்கு மத்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் அனுமதி வழங்கிவிட்டன. 150 நாடுகளுக்கு கரோனில் மருந்தை சப்ளை செய்யத் தயாராக இருக்கிறோம்.
எங்கள் மருந்து தொடர்பான அனைத்துவிதமான அறிவியல் பூர்வமான ஆய்வுகளையும் மத்திய ஆயுஷ் அமைச்சகம், மேற்கொண்டுதான் இந்த அனுமதியை வழங்கியுள்ளது." எனத் தெரிவித்தார்.
கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்து என்ற அடையாளத்துடன் மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்தாகவே கரோனில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனில் மருந்துக்கு உலக சுகாதாரஅமைப்பு எந்தவிதமான அங்கீகாரத்தையும், அனுமதியையும் வழங்கவில்லை. அவ்வாறு வழங்கியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்று இந்திய மருத்துக் கூட்டமைப்பு(ஐஎம்ஏ) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் மருத்துவத்துறை அமைச்சராக இருப்பவர், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத பொய்யான ஒரு பொருளை நாட்டு மக்களுக்கு எவ்வாறு அறிமுகப்படுத்த முடியும். எந்தக் காலகட்டத்தில் கரோனா தடுப்பு மருந்துக்கு நீங்கள் கூறும் கிளினிக்கல் பிரிசோதனை நடத்தப்பட்டது என்பதை விளக்க முடியுமா. இந்த தேசத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம்.
இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் கடிதம் எழுதி, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை அப்பட்டமாக மீறியதற்கு விளக்கம் கேட்கும்
கரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கிவிட்டது என்ற செய்தி கேட்டு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அதிர்ச்சி அடைந்தது. இது அப்பட்டமான பொய். அவ்வாறு எந்த அங்கீகாரத்தையும் வழங்கவில்லை என உலக சுகாதார அமைப்பே தெரிவித்துள்ளது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிரிவு கரோனில் மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அதில், " உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பாக எந்தவிதமான பாரம்பரிய மருந்துக்கும் அனுமதியோ, அங்கீகாரமோ வழங்கவில்லை, அது குறித்து பரிசீலனையும் செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் பதஞ்சலி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்ட விளக்கத்தில் " உலக சுகாதார அமைப்பு எங்களின் கரோனில் மருந்துக்கு எந்தவிதமான அங்கீகாரமும் வழங்கவில்லை, அங்கீகாரம் வழங்க மறுக்கவும் இல்லை. இதில் குழப்பம் நடந்துள்ளதால் விளக்கம் அளிக்கிறோம். கரோனில் மருந்துக்கு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் பொருள் என்ற சான்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT