Published : 22 Feb 2021 01:48 PM
Last Updated : 22 Feb 2021 01:48 PM
கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலால், மங்களூரு உள்ளிட்ட கர்நாடக எல்லைக்குள் வரும் கேரளப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளைக் கர்நாடக அரசு விதித்துள்ளது.
கேரளாவில் இருந்து வரும் மக்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்துக்குள் நுழைவதற்கு கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மங்களூரு சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
தட்சின கன்னடா - கேரளா எல்லை வழிச்சாலையும் இன்று காலை முதல் மூடப்பட்டது. 72 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கரோனா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருவதால், மாநிலத்தில் நுழையும் கேரள வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ளோம். 72 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று இருந்தால்தான் அனுமதிக்கப்படுவர். இன்று காலை முதல் மைசூரின் தாளப்பாடி சாலை, பந்த்வால் சாரத்கா சாலை, புத்தூர் தாலுக்காவில் உள்ள நெட்டான்கே-முத்னூர் சாலை, சுலையாவில் உள்ள ஜல்சூர் சாலை ஆகியவை மூடப்பட்டுள்ளன. கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் இருக்கும் மக்கள் தங்களின் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கும் உயர்ந்த தரத்திலான மருத்துவமனைகளுக்கும் மங்களூருக்குத்தான் சென்று வருகிறார்கள். ஆனால், இன்று காலை முதல் திடீரென கேரளா-கர்நாடகா எல்லை மூடப்பட்டதையடுத்து, மக்கள் பெரிய சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
காசர்கோட்டிலிருந்து 10 முதல் 50 கி.மீ. தொலைவில்தான் மங்களூரு இருக்கிறது. கண்ணூர் செல்ல வேண்டுமென்றால் 100 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே இதேபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளைக் கர்நாடக அதிகாரிகள் கொண்டுவந்தனர். அப்போது, மிகவும் ஆபத்தான நிலையில் நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டுமென்றால்கூட, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டது. இந்தச் சான்றிதழை வழங்க முடியாமல், சில நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT