Published : 22 Feb 2021 12:29 PM
Last Updated : 22 Feb 2021 12:29 PM
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு முடிவு செய்ய பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. போலீஸார், பாதுகாப்புப் படையினர் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். ஆதலால், பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என மெகபூபா முப்தி நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இதே கோரிக்கையை தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''ஜம்மு காஷ்மீரில் தீவிரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், தீவிரவாதம் ஒழிந்துவிட்டதாக பாஜக தொடர்ந்து பேசி வருகிறது. நாம் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் அனைவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்களை மாற்றலாம். ஆனால், உங்கள் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது. நட்பை வளர்த்தால் வளர்ச்சி இருக்கும் அல்லது விரோதத்தை வளர்த்தால் வளர்ச்சி இருக்காது என்றார்.
சீனாவுடன் மத்திய அரசு நடந்துகொண்ட முறையைப் போலவே பாகிஸ்தானுடன் நடக்க வேண்டும். கிழக்கு லடாக்கில் படைகளை வாபஸ் பெற்று சுமுகமான சூழலை உண்டாக்கியதுபோல், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தி ஜம்மு காஷ்மீரிலும் அதே சூழலை உருவாக்க வேண்டும்.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய அரசு ரூ.30க்கு பெட்ரோலை உற்பத்தி செய்து அதை மக்களுக்கு ரூ.100க்கு விற்பனை செய்வது தவறானது. நடுத்தர மக்களுக்கு வருமானம் என்பது நிலையானது. அவர்கள் அந்த வருவாயில்தான் வீட்டுச் செலவுகளைப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும். நோயுற்றவர்களையும் கவனிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒட்டுமொத்த நாட்டையும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது''.
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT