Published : 22 Feb 2021 12:02 PM
Last Updated : 22 Feb 2021 12:02 PM
புதிய நாடாளுமன்றம் கட்டுவது இப்போதுள்ள நிலையில் தேவையில்லாத ஒன்று. எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துவிட்டு நாடாளுமன்றம் கட்டுகிறது மத்திய அரசு என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே குற்றம் சாட்டியுள்ளார்.
இப்போதைய நாடாளுமன்றம் 94 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடம் கட்டும்போது அப்போது ரூ.83 லட்சம் செலவானது. இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. தரைதளம் மட்டும் 16,921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.
இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை உருவாக்கப்பட உள்ளன. மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வகையில் கட்டப்பட உள்ளது. அதிலும் கூட்டுக் கூட்டத்தொடர் நடந்தால் 1,272 பேர் அமரும் வகையில் மிகவும் விஸ்தாரமாக அமைக்கப்பட உள்ளது.
ஸ்மார்ட் டிஸ்ப்ளேவுக்குத் தேவையானவாறு நாற்காலிகள், எம்.பி.க்கள் பயோ-மெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு, முகத்தை வைத்து அடையாளம் காணுதல், அதிநவீன மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்தப் புதிய நாடாளுமன்றத்தில் செய்யப்பட உள்ளன.
புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைதளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம் அம்பர்நாத் நகரில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே இன்று சென்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "மத்திய விஸ்டா திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.800 முதல் ரூ.1000 கோடி செலவிடப்போகிறது.
புதிய நாடாளுமன்றம் கட்டுங்கள் என்று எம்.பி.க்கள் கேட்கவில்லையே. தற்போது நாட்டில் கரோனா பரவல் முழுமையாகக் குறையாத நிலையில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது தேவையில்லாத ஒன்று. எம்.பி.க்களுக்கான நிதியை ரத்து செய்துவிட்டு புதிய நாடாளுமன்றம் கட்டுகிறது மத்திய அரசு.
எங்களின் நிதியில் மக்களுக்குப் பயன்படும் வகையில் மருத்துவமனை கட்டப்போகிறோம் என்றால் 5 ஆண்டுகளுக்கும் ரத்து செய்துவிடுங்கள் என்று நான் மகிழ்ச்சியுடன் கொடுத்திருப்பேன்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT