Published : 22 Feb 2021 10:44 AM
Last Updated : 22 Feb 2021 10:44 AM
உத்தரப் பிரதேசத்தில் ஏழு கொலைகள் செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட காதல் ஜோடிகளின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், இருவரும் தங்களது தூக்கு தண்டனையை ஒத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 13 வருடங்களுக்கு முன்பாக உ.பி.யின் மேற்குப் பகுதி அம்ரோஹாவின் ஹசன்பூரிலுள்ள பவன்கேடி கிராமத்தில் காதலனுடன் சேர்ந்து வாழ இளம்பெண் ஷப்னம் தனது குடும்பத்தினரைக் கொல்ல முடிவு செய்தார். இந்தச் சம்பவத்தில் ஷப்னத்தின் தந்தை, தாய், மூத்த சகோதரர், அண்ணி, அவர்களது 10 மாதக் குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் ஏழு பேர் கொலை செய்யப்பட்டனர். இதற்காக இரவில் அனைவருக்கும் பாலில் தூக்க மருந்தைக் கலந்து ஷப்னம் அலி கொடுத்திருந்தார்.
இதனால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்களைத் தனது காதலன் சலீமை அழைத்து கோடரியால் கழுத்தை வெட்டிக் கொலை செய்ய வைத்தார் ஷப்னம். அப்போது மேலும் மூன்று குடும்ப உறுப்பினர்கள் ஒரு திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்ததால் உயிர் தப்பினர். இந்தக் கொலையைத் திருடர்கள் செய்ததாகவும், கழிப்பறையில் பூட்டிக்கொண்டு தான் உயிர் பிழைத்ததாகவும் ஷப்னம் கூறினார். பிறகு தப்பியோடிய காதலனுடன் ஷப்னம் கைதாகி, இருவர் மீதும் கொலை வழக்கு நடைபெற்றது.
அப்போது முதல்வராக இருந்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அக்கிராமத்திற்கு நேரிலும் சென்று வந்தார். இவ்வழக்கை விசாரித்த அம்ரோஹா மாவட்ட நீதிமன்ற நீதிபதி இறுதியில் இருவருக்கும் தூக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பளித்தார். இந்த தண்டனை, அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் மீதான முதல் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இருவரையும் தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றும் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. இதில், ஷப்னம் சுதந்திரத்திற்குப் பின் தூக்கிலிடப்படும் முதல் பெண்ணாக உள்ளார். இதற்காக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பெண்களைத் தூக்கிலிட உ.பி.யின் மதுரா சிறையில் அமைக்கப்பட்ட அறை தயாராகி வருகிறது. தற்போது ஷப்னம் ராம்பூர் சிறையிலும், சலீம் பிரயாக் ராஜின் நைனி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். ஷப்னத்தைத் தூக்கிலிட வாரண்டைப் பிறப்பிக்க ராம்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்குச் சிறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் தூக்கு தண்டனையை ஒத்திவைக்க வேண்டி ஷப்னம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக, இரண்டாவதாக ஒரு கருணை மனுவை ஷப்னம் தனது வழக்கறிஞர்கள் மூலமாக உ.பி. ஆளுநர் அனந்திபென் படேலுக்கு அனுப்பியுள்ளார். இதனால், மனு மீது முடிவு எடுக்கப்படும் வரை தூக்கிலிடப்படுவது ஒத்தி வைக்கப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஷப்னம் அலி, சைபி பிரிவிலும், சலீம் பட்டான் பிரிவு முஸ்லிமாகவும் இருந்துள்ளார். இதனால், அவர்கள் திருமணத்திற்கு ஷப்னமின் பெற்றோர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், இவ்விருவருக்குள் தாம்பத்திய உறவு தொடர்ந்ததால், கொலை சம்பவத்தின்போது ஷப்னம் இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார். பிறகு அவருக்குத் திருமணம் ஆகாமலே ராம்பூர் சிறையில் ஆண் குழந்தை பிறந்தது.
இவரது 12 வயது மகன், ஷப்னம் கோரியபடி சிறை அதிகாரிகளால் அவரது நண்பரிடம் ஒப்படைக்கப்பட்டு புலந்த்ஷெஹரில் வளர்க்கப்படுகிறார். இச்சிறுவனும் தனது தாயை மன்னிக்கும்படி கோரி, குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை எழுதி அனுப்பியுள்ளார்.
நேற்று ராம்பூர் சிறையில் தனது தாய் ஷப்னத்தை அவரது மகன் சந்தித்தார். அப்போது அவரிடம் ஷப்னம், தான் இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் கூறியுள்ளார். தன் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளால் ஷப்னம் தனது தூக்கு தண்டனையை ஒத்திவைக்க முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ராம்பூர் சிறைச்சாலை சார்பில் இரண்டாவது முறையாக மாவட்ட நீதிமன்றத்திடம் ஷப்னத்தின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் ஷவுகத் அலி சைபி என்றழைக்கப்படும் ஆசிரியரின் ஒரே மகளாக இருந்தவர் ஷப்னம். இவர், ஆங்கிலம், புவியியல் என இரு பாடப்பிரிவுகளில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். உள்ளூரில் ஒரு தனியார் பள்ளியில் ஷப்னம் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவருக்கு வீட்டிற்கு எதிர்ப்புறத்திலிருந்த மரம் அறுக்கும் பணிமனையில் பணியாற்றிய சலீமுடன் காதல் ஏற்பட்டிருந்தது.
இந்த சலீம், ஆறாம் வகுப்பு தேர்ச்சி பெற முடியாமல் பள்ளிப் படிப்பைத் தொடராதவர். ‘காதலுக்குக் கண் இல்லை’ என்பதை நிரூபிக்கும் வகையில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில் ஏழு பேர் பரிதாபமாகப் பலியாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT