Last Updated : 21 Feb, 2021 05:03 PM

2  

Published : 21 Feb 2021 05:03 PM
Last Updated : 21 Feb 2021 05:03 PM

அலிகரில் காதலியுடன் சேர்ந்து பணத்திற்காக பெற்ற தாயை கொன்ற மகன்: 24 மணி நேரத்தில் கைது செய்த ‘உ.பி. சிங்கம்’ முனிராஜ் ஐபிஎஸ்

புதுடெல்லி

உத்தரப்பிரதேசம் அலிகரில் காதலியுடன் இணைந்து பணத்திற்காக பெற்ற தாயை மகன் கொலை செய்தார். இவ்வழக்கில் நேரடியாகப் புலனாய்வு செய்த ஜி.முனிராஜ் ஐபிஎஸ் அடுத்த 24 மணி நேரத்தில் ரூ.1கோடி மதிப்பிலான நகைகளையும் மீட்டு 4 பேரை கைது செய்தார்.

அலிகரின் குவார்ஸி பகுதியிலுள்ள சரோஜ் நகர் காலனியில் தனியாக வாழ்ந்து வந்தவர் கஞ்சன் வர்மா. இவரது கணவரான குல்தீப் வர்மா, அலிகரில் கே.கே.ஜுவல்லர்ஸ் எனும் பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

இவர்களுக்கு பிள்ளைகளான இரண்டு மகள் மற்றும் ஒரே மகனுக்கு மணமாகி தனியாக வசிக்கின்றனர். இதில் 4 மாதங்களுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி சித்ரா சர்மா எனும் பெண்ணை, மகன் யோகேஷ் வர்மா காதல் திருமணம் செய்துள்ளார்.

இதனால், தனியாக வசித்து வர, கஞ்சன் மற்றும் குல்தீப் வர்மா தம்பதிகள் அலிகர் வீட்டில் வசித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை தனியாக இருந்த கஞ்சன் தனது வீட்டின் குளியலறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.

இந்த தகவல் அவரது திறந்த வீட்டில் நுழைந்த உறவினர் மூலமாக அறியப்பட்டு அலிகர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அறிந்த எஸ்எஸ்பியான தமிழர் ஜி.முனிராஜ் அங்கு நேரில் சென்றார்.

ஜி.முனிராஜ்

தொடர்ந்து வழக்கை தனது நேரடிக் கண்காணிப்பில் விசாரிக்கத் துவங்கினார். இதன் சிசிடிவி பதிவுகளில் இருவரின் உருவங்கள் மட்டும் பதிவாகி இருந்தது.

கடையின் விற்பனைக்காக வீட்டில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தன. இது, அலிகரின் ஒரு கொள்ளைக் கும்பலால் திருடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் என சந்தேகம் போலீஸாருக்கு இருந்துள்ளது.

மேலும், இக்கொலையை அவ்வீட்டை பற்றி நன்கு அறிந்தவர்கள் செய்திருக்கலாம் எனவும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மறுநாள், தனது தாயின் இறுதிச்சடங்குகள் செய்த மகன் யோகேஷை விசாரித்துள்ளார் அதிகாரி முனிராஜ்.

அப்போது அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கத் திணறிய யோகேஷ், கடைசியில் இரவில் கைதிற்கு பின் நேற்று ஒப்புக் கொண்டார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை இணைத்திடம் அலிகரின் எஸ்எஸ்பியான ஜி.முனிராஜ் கூறும்போது, ‘துவக்கம் முதலாக எங்களுக்கு மகன் யோகேஷ் மீது சந்தேகம் இருந்ததால் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.

இறுதியில் வேறு வழியின்றி அவர் தனது மனைவி, நண்பர் மற்றும் அவரது காதலி என நால்வர் இணைந்து செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்காததால் பணத்திற்காக இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தார்.

மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்த மகன் யோகேஷுக்கு தாய் கஞ்சன் கதவை திறந்து விட்டிருக்கிறார். அவரை தொடர்ந்து யோகேஷின் நண்பரும் காதலியும் உள்ளே நுழைந்துள்ளனர்.

பிறகு வீட்டிலிருந்த நகைகளை கொள்ளை அடித்து விட்டு தாயின் கழுத்தில் சேலையால் இறுக்கி கொலை செய்து குளியலைறையில் கிடத்திவிட்டு தப்பி உள்ளனர். உபியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

இவ்வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் யோகேஷின் மனைவி சோனம் என்கிற சித்ரா சர்மா, நண்பர் தனுஷ் சவுத்ரி மற்றும் அவரது காதலி செஹஜல் சவுகான் ஆகிய மூவரும் இன்று காலை கைதாகி உள்ளனர்

உ.பி.யின் முக்கிய மாவட்டங்களில் எஸ்எஸ்பியாகப் பணியாற்றிய தமிழரான ஜி.முனிராஜ், ‘உபி சிங்கம்’ என அம்மாநிலவாசிகளால் அழைக்கப்படுகிறார். இதற்கு அவர் பரேலியில் பணியாற்றிய போது மதக்கலவ்ரத்தை தடுக்க பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்தது காரணமானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x