Published : 21 Feb 2021 02:42 PM
Last Updated : 21 Feb 2021 02:42 PM
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. புனேயில் வரும் 28-ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் லாக்டவுன் கொண்டுவரப்படுவது குறித்த பேச்சும் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மும்பையில் குடிசைப்பகுதி அல்லாத நகர்ப்புறப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 5-வது நாளாக மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,281 பேர் புதிதாகப் பாதிக்ககப்பட்டனர். கடந்த 85 நாட்களுக்குப்பின் மீண்டும் அதிகரித்து, ஒட்டுமொத்த பாதிப்பு 20,93,913 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 51,753 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்புக் குழுவின் தலைவரும் மருத்துவரான சஞ்சய் ஓக் கூறுகையில் " மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை நாம் 2-வது அலை எனக் கூற முடியாது. மக்கள் முறையாக கரோனா தடுப்பு முறைகளைக் கையாளவில்லை, முகக்கவசம் அணிவதில்லை, சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை. தங்களுக்குள்ளே கட்டுப்பாடு தேவை" எனத் தெரிவித்தார்
மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் வியாஸ் கூறுகையில் " மக்கள் ஒழுங்குமுறை கடைபிடிக்காமலும், மெத்தனமாக இருப்பதே கரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம். விதிமுறைகளைக் கடைபிடிப்பதில் மெத்தனம் இருந்து வருகிறது. நம்மைச் சுற்றித்தான் கரோனா இருந்து வருகிறது. நாம் மெத்தனமாக இருந்தால் பாதிக்கப்படுவோம் " எனத் தெரிவித்தார்.
மும்பை மாநகராட்சி ஆணையர் சுரேஷ் ககானி கூறுகையில் " 90 சதவீத கரோனா பாதிப்பு அனைத்தும் வீடுகளில் இருந்துதான் வருகின்றன. பலர் அறிகுறியில்லாதவர்களாகவும், லேசான அறிகுறிகளுடன் இருப்பதாலும் வீ்ட்டிலேயே இருக்க அறிவுறுத்துகிறோம். பரிசோதனையையும் கண்காணிப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறோம்.
கரோனா வைரஸ் பாதிப்பு இரட்டிப்பு ஆகும் நாட்கள் 600லிருந்து 393ஆகக் குறைந்துள்ளது. அதிகமான சர்வதேச பயணிகள் மும்பைக்கு வருவது, கேரளா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், கோவா போன்ற மாநிலங்களில் இருந்து பயணிகள் வருவதால் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. அதிலும் கடந்த 1ம்தேதியிலிருந்து அனைத்துச் சேவைகளும் திறக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அமராவதி, யவத்மால், அகோலா, விதர்பா மாவட்டங்களில் கரோனா பாதிப்பு நாள்தோறும் 1,400க்கு மேல் அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
மும்பை பெருநகராட்சிஆணையர் கக்கானி கூறுகையில் " மும்பையில் மீண்டும் லாக்டவுன் கொண்டுவருவது குறித்து எந்தத் திட்டமும் இல்லை. பரிசோதனையை அதிகப்படுத்தி இருக்கிறோம், மக்கள் முகக்கவசம் இன்றி வந்தால் அபராதம் விதிக்க இருக்கிறோம். கடந்த 24 மணிநேரத்தில் 897 பேர் மும்பையில் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே புனே நகரில் பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 28-ம் தேதிவரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர, ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் ,கடைகள் போன்றவை இரவு 10 மணியுடன் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT