Published : 21 Feb 2021 03:18 AM
Last Updated : 21 Feb 2021 03:18 AM

கேரளாவில் குழந்தையை தத்தெடுத்த 2 வாரத்தில் விபத்தில் உயிரிழந்தார் தாய்: உறவுகளுக்கு அறிமுகம் செய்ய சென்றபோது பரிதாபம்

தாயின் உடலைப் பார்த்து அழும் குழந்தையை சமாதானம் செய்யும் தந்தை ஜாய்.

திருவனந்தபுரம்

பெற்ற குழந்தைகளே பெற்றோரை கைகழுவிச் செல்லும் இன்றைய காலகட்டத்தில் தன்னை தத்தெடுத்த வளர்ப்புத்தாய் விபத்தில் உயிரிழக்க தத்துக்குழந்தை கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளத்தின் கோட்டயம் மாவட்டம், செருவந்தூ பகுதியைச் சேர்ந்தவர் ஜாய். தனியார் நிறுவன ஊழியராக உள்ளார். இவரது மனைவி சாலி. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிசெய்து வந்தார். கரோனா காலத்தில் பணியில் இருந்து வெளியேறிய சாலி, வீட்டின் பக்கத்திலேயே சொந்தமாக ஜூவல் என்னும் பெயரில் கடை நடத்திவந்தார். ஜாய் - சாலி தம்பதியினருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்க தம்பதிகள் முடிவு செய்தனர்.

அதன்படி டெல்லியில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு லெட்சுமி என்ற 6 வயது சிறுமியை தத்தெடுத்தனர். அந்தக் சிறுமிக்கு தங்கள் கடையின் பெயரான ஜூவல் என்பதையே சூட்டி வளர்க்கத் துவங்கினர்.

தாய் இன்றி தவித்த ஜூவலுக்கு, தாய்ப்பாசத்தை முழுதாக கொட்டித்தீர்த்தார் சாலி. அந்த அன்பில் ஜூவல் நெகிழ்ந்து போய் இருந்தார். ஆனால் அந்த சந்தோசம் நீண்டகாலத்துக்கு நீடிக்கவில்லை. தங்கள் உறவினர்கள் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துப்போய் தன் மகளை அறிமுகம் செய்துவந்தார் சாலி. அந்தவகையில் சுனில் என்ற உறவுக்காரர் வீட்டுக்கு தன் மகள் ஜூவலை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திவிட்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று சாலி மற்றும் ஜூவல் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். காயமடைந்த அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் சாலி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ஜூவலுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

தான் பிறந்தது முதலே தாயை பார்த்திராத அந்த சிறுமி, தன் வளர்ப்புத்தாயையும் 15 நாள்களிலேயே இழந்த செய்தியைக் கேட்டதும் கதறி அழுதது. அதேநேரம் முற்போக்கு சிந்தனையுடன் பெண் குழந்தையை தத்தெடுத்து, அதை தன் உறவுகளிடமும் அறிமுகப்படுத்திவைக்க அழைத்துச் சென்றபோது விபத்தில் சாலி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x