Published : 20 Feb 2021 07:49 PM
Last Updated : 20 Feb 2021 07:49 PM
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படைப் பிரிவு வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஏப்ரல்- மே மாதங்களில் தமிழகம், கேரளா, மே.வங்கம், அசாம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை சுமூகமாக நடத்தி முடிக்க தேவையான படைகளை அனுப்புவது குறித்து ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பேசியுள்ளனர்.
இதன்படி, இந்த 5 மாநிலங்களுக்கும் 250க்கும் மேற்பட்ட கம்பெனி படைகளை அனுப்ப உள்துறை முடிவு செய்துள்ளது. இதில் சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ-திபத்தியன் எல்லை போலீஸார், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், சாஸ்த்ரா ஷீமா பால் பிரிவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் "5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 250க்கும் மேற்பட்ட கம்பெனி மத்தியப் படைகள் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 125 கம்பெனிப் படைகள் மேற்கு வங்கத்துக்கும், 45 கம்பெனிகள் தமிழகத்துக்கும், 40 கம்பெனி அசாம் மாநிலத்துக்கும் அனுப்பப்படும். கேரளாவுக்கு 30 கம்பெனியும், புதுச்சேரிக்கு 10 கம்பெனியும் அனுப்பி வைக்கப்படும்.
இந்த எண்ணிக்கை என்பது தேர்தல் ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் நடத்திய பேச்சுக்குப்பின் முதல்கட்ட கணிப்பாகும். தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தபின், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கிறது என்பதைப் பொறுத்து, மத்திப்படைகளின் கம்பெனிகள் எண்ணிக்கை மாறுபடும்.
இந்த 250 கம்பெனி படைகள் போக, 75 கம்பெனிப்படைகள் தனியாக தயாராக வைக்கப்படுவார்கள். எந்த மாநிலத்துக்கு தேவைப்படுகிறதோ அங்கு பாதுகாப்புக்காக உடனடியாக இந்த 75 கம்பெனிப்படையினரும் அனுப்பிவைக்கப்படுவார்கள்.
இந்த 250 கம்பெனிகளில் சிஆர்பிஎப் 85 கம்பெனிகள், பிஎஸ்எப் 60 கம்பெனிகள், ஐடிபிபி 40 கம்பெனிகள் ஆகியவை இருக்கும். அனைத்துப் படைகளும் இப்போது இருந்தே படிப்படியாக அந்தந்த மாநிலத்துக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். முதல்கட்டமாக 12 கம்பெனிப்படைகள் மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளனர். விரைவில் தமிழகத்துக்கும் கம்பெனிப்படைகள் செல்ல உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT