Published : 20 Feb 2021 02:04 PM
Last Updated : 20 Feb 2021 02:04 PM

பெரிய வெங்காயம் விலை மேலும் உயரும்: நாசிக் வியாபாரிகள் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை மீ்ண்டும் உயரக்கூடும் என நாசிக் லாசல்கான் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் அரபிக்கடலில் ஏற்பட்ட கிபுயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.

பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.

நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 180 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன. மேலும் பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இதன்பிறகுவெங்காயத்தின் விலை சற்று குறைந்தது. இதனால் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது. எனினும் தற்போது வெங்காயம் விலை முழுமையாக குறையவில்லை. தற்போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சில்லரை விற்பனையில் பெரிய வெங்காயம் 50 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

இந்தநிலையில் வெங்காயம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் ‘‘ கடந்த மாதத்தில் மகாராஷ்டிராவில் மீண்டும் பருவம் தவறி பெய்த மழையால் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. நாசிக் சந்தையில் பெரிய வெங்காயம் தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 முதல் 4,500 வரை விற்கப்படுகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்கக் கூடும்’’ எனத் தெரிவித்தனர்.

இதனிடையே தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x