Published : 20 Feb 2021 12:58 PM
Last Updated : 20 Feb 2021 12:58 PM
சாமானிய மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை, நாங்கள் எதிர்க்கட்சிகள் என்ற அடையாளத்துக்காக மட்டுமே அரசை எதிர்க்கவில்லை என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் கடந்த 15-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய எதிர்க்கட்சித் தலைவராகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் அடுத்த இரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காகக் காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கொல்லம் நகரில் காங்கிரஸ் சார்பில் ஐஸ்வர்ய கேரள யாத்திரை எனும் பிரச்சாரத்தில் மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் சேர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்றார்.
அதன்பின் பின், திருவனந்தபுரத்தில் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கள் எதிர்க்கட்சிகள் என்பதால் மட்டும் அரசின் அனைத்து விஷயங்களையும் எதிர்க்கவில்லை. சாமானிய மக்களைப் பாதிக்கும் அரசின் அனைத்து தவறான கொள்கைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். சாமானிய மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை.
எனக்கு இந்தப் பதவியை வழங்கும்போது கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கூறிய அறிவுரையில், சாமானிய மக்களின் பிரச்சினைகள் மீது அதிகமாக அக்கறை செலுத்துங்கள், அதைப்பற்றிப் பேசி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்தார்கள்.
நாங்கள் நாடாளுமன்றத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை எழுப்புவது விளம்பரத்துக்காக மட்டுமல்ல. அது சாமானிய மக்களைப் பாதிப்பதால், அந்த விவகாரங்களை எழுப்புகிறோம்.
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று, அதை நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் குரல்களை பிரதமர் மோடியும், பாஜகவும் செவிமடுத்துக் கேட்க வேண்டும்.
குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், மண்டி முறையை வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோருகிறார்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் விவசாயிகளின் திருப்திப்படுத்த அரசு தவறவிட்டது.
மத்திய அரசு தனது அனைத்து அதிகாரிகளையும், துறைகளையும் பயன்படுத்தி, போராடும் விவசாயிகளை காலிஸ்தானிகள் என்றும், பாகிஸ்தானியர்கள் என்றும் அடையாளப்படுத்துகிறது. குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த சம்பவத்தில் ஏதோ சதி நடந்திருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தில் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வன்முறை நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கிறது. எரிபொருள் விலையை உயர்த்தி மத்திய அரசு மக்களுக்கு அநீதி இழைக்கிறது.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT