Last Updated : 19 Feb, 2021 08:04 PM

4  

Published : 19 Feb 2021 08:04 PM
Last Updated : 19 Feb 2021 08:04 PM

கரோனில் மருந்து தயார்; சர்வதேச அளவில் விரைவில் விற்பனை: பாபா ராம்தேவ் பேட்டி

யோகா குரு பாபா ராம்தேவ் பேட்டி அளித்த காட்சி | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் பதஞ்சலி ஆயுர்வேதா சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனில் மருந்து சர்வதேச விற்பனைக்குத் தயாராக இருக்கிறது என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்து என்ற அடையாளத்துடன் மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்தாகவே கரோனில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து யோகா குரு பாபா ராம்தேவ் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

''பதஞ்சலி யோகா சார்பில் கரோனா வைரஸுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட கரோனில் மருந்துக்கு மத்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் அனுமதி வழங்கிவிட்டன. 150 நாடுகளுக்கு கரோனில் மருந்தை சப்ளை செய்யத் தயாராக இருக்கிறோம். இந்த மருந்தால் நிச்சயம் கரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

எங்கள் மருந்து தொடர்பான அனைத்துவிதமான அறிவியல் பூர்வமான ஆய்வுகளையும் மத்திய அரசு, சர்வதேச அளவுக்கு ஏற்ப மேற்கொண்டுதான் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. எங்கள் மருந்தை மத்திய அரசு மட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்பும் ஏற்றுக்கொண்டு மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

கரோனில் மருந்தைத் தயாரிக்கும் முன், இதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்து என்ற அடிப்படையில்தான் அரசிடம் இருந்து உரிமம் பெற்றோம். கிளினிக்கல் பரிசோதனை, ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன்பின் அரசு அனுமதி கிடைக்க நீண்ட நாட்கள் ஆனது.

அனைத்துப் பணிகளும் முடிய ஏறக்குறைய 7 மாதங்கள் ஆகியுள்ளன. முதலில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து என்று அங்கீகாரம் பெற்று, தற்போது கரோனா சிகிச்சைக்கும் கரோனில் மருந்து பயன்படுத்தப்படுகிறது.

கரோனா தடுப்பூசி போடுபவர்கள் முதலில் கரோனில் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால், கரோனா தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த நீண்ட நாட்களாகும்.

ஆதலால், யாரெல்லாம் கரோனா தடுப்பூசி போடவில்லையோ அவர்கள் கரோனில் மருந்தை எடுக்கலாம். ஏனென்றால் இதை விடச் சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. கரோனா தடுப்புக்கும், கரோனா சிகிச்சைக்கும், கரோனா பாதிப்புக்குப் பின்பும் எடுத்துக்கொள்ள கரோனில் சிறந்த மருந்து.

எங்கள் கரோனில் மருந்தை உலகின் பல நாடுகள் எதிர்நோக்கியுள்ளன. இந்த மருந்து விரைவாகவே வந்திருக்கும். ஆனால், பல்வேறு சர்ச்சைகள் உருவாகியிருக்கும். மக்கள் குழப்பம் அடைந்திருப்பார்கள்.

இப்போது அந்தக் குழப்பங்கள் நீங்கிவிட்டன. உண்மையில் இந்த மருந்தை வெளிக்கொண்டு வருவதில் நாங்கள் தாமதம் செய்யவில்லை. சில சக்திகள் தாமதத்துக்குக் காரணமாகிவிட்டன. அனைத்துத் தடைகளும் முடிந்து கரோனில் மருந்து வருவதால் மகிழ்ச்சி அடைகிறேன்''.
இவ்வாறு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x