Published : 19 Feb 2021 03:31 PM
Last Updated : 19 Feb 2021 03:31 PM
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்க்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியிலிருந்து இந்திய, சீன ராணுவம் முழுமையாக வெளியேறிவிட்டன. இதையடுத்து,இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நாளை பேச்சு நடைபெற உள்ளது
இந்த பேச்சுவார்த்தையின் போது கிழக்கு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தீப்சாங் ஆகிய பகுதியில் இருந்து படைகளை விரைவாக வாபஸ் பெறுவது குறித்து பேசப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் இந்தியத் தரப்பிலும், சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தின் உயர் அதிகாரிகள் கடந்த 9 மாதங்களாகத் தொடர்ந்த பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதுவரை 9 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாங்காங் ஏரியின் தெற்கு, வடக்கு கரையிலிருந்து இரு நாட்டு ராணுவத்தினரும் வெளியேறுவது என உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கடந்த 10-ம் தேதியிலிருந்து இரு நாட்டு ராணுவத்தினரும் வெளியேறும் பணியைத் தொடங்கி முழுமையாக வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து 10-வதுசுற்றுப் பேச்சுவார்த்தை சீனாவின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மால்டா பகுதியில் நாளை காலை 10.மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் இந்தியா தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் பிஜிகே மேனன் பங்கேற்பார் எனத் தெரிகிறது. சீன தரப்பில் சவுத் ஜின்ஜியாங் ராணுவத்தின் கமாண்டர் மேஜர்ஜெனரல் லியூ லின் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
இந்த 10-வது சுற்றுப்பேச்சு வார்த்தையில் கிழக்கு லடாக்கின் மற்ற பகுதிகளான ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தீப்சாங் ஆகிய பகுதியில் இருந்து படைகளை விரைவாக வெளியேற்றுவது குறித்துப் பேசப்படும். மேலும், இந்த பகுதிகளில் இருந்து படைகளை விரைவாக வெளியேற்றி, பதற்றத்தைக் குறைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது. பாங்காங் ஏரிப்பகுதியில் இரு நாட்டு படைகளும் வெளியேறியபின் நடக்கும் முதல் பேச்சுவார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.
பாங்காங் எல்லைப்பகுதியிலிருந்து பீரங்கிகள், படைகள், ஆயுதங்கள், தளவாடங்கள், குடில்கள், கட்டுமானங்கள் அனைத்தையும் இரு நாட்டு படைகளும் அகற்றும் பணி நேற்று முழுமையாக முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப்பகுதியில் ஏதேனும் வெளியேற்றப்பட வேண்டுமா என இருதரப்பிலும் ஆய்வுப்பணிகள் மட்டும் நடந்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த மோதலின்போது எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்து சீனா வாய்திறக்காமல் மவுனம் சாதித்து வந்தது. ஆனால், முதல்முறையாகச் சீனா தரப்பில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
முன்னதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பேசுகையில் " பாங்காங் ஏரியிலிருந்து இரு நாட்டு ராணுவமும் வெளியேறுவது குறித்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT