Published : 19 Feb 2021 12:43 PM
Last Updated : 19 Feb 2021 12:43 PM
பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன்பிரதேச துணை நிலை ஆளுநர்கள், பல்வேறு மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய மத்திய அரசின் மிக உயர்ந்த குழுவாக நிதி ஆயோக் இருந்து வருகிறது.
நிதிஆயோக் சார்பில் நாளை நடைபெறும் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் வேளாண் பிரச்சினைகள், உள்கட்டமைப்பு, உற்பத்தித்துறை, மனிதவள மேம்பாட்டு ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள், வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜகவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடிக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே நேரடியான கருத்து மோதல்கள் ஏற்பட்டு பொதுக்கூட்டங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை நடைபெறும் நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார், அதில் பங்கேற்கமாட்டார் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு முன் இதேபோன்று நிதிஆயோக் குழுக் கூட்டத்தையும் மம்தா பானர்ஜி புறக்கணித்து அதில் பங்கேற்கவில்லை. நிதிஆயோக் கூட்டம் உதவாத முயற்சி, இந்த அமைப்புக்கு நிதி அதிகாரம் ஏதுமில்லை, மாநிலங்களின் திட்டங்களுக்கு அங்கீகாரமும், ஆதரவும்அளிக்க முடியாது என விமர்சித்திருந்தார்.
6-வது நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முதல் முறையாக லடாக் சார்பில் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு லடாக் யூனியன் பிரதேசமாக உருவானபின் முதல்முறையாக நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறது. இந்த முறை யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT