Published : 18 Feb 2021 06:47 PM
Last Updated : 18 Feb 2021 06:47 PM
ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த கடலில் 12 வயது சிறுமி 36 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த, கடற்படை மாலுமி ஒருவரின் 12 வயது மகள், மும்பை பாந்த்ரா - வொர்லி கடல் பகுதியிலிருந்து, கேட் வே ஆப் இந்தியா வரை 36 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்தார்.
கடற்படை வீரர் மதன் ராய் என்பவரின் மகள் ஜியா ராய் (12). ஆட்டிசத்தால் (மன இறுக்க கோளாறு) பாதிக்கப்பட்டவர். ஆனால், நீச்சல் பயிற்சியில் இவர் கைத்தேர்ந்தவர்.
இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த சிறுமி கடலில் நீண்ட தூரம் நீந்தி சாதனை படைக்க விரும்பினார்.
மும்பை பாந்த்ரா - வொர்லி கடல் பகுதியில் 2021 பிப்ரவரி 17ம் தேதி அதிகாலை 3.50 மணிக்கு ஜியா ராய் நீந்த தொடங்கினார். 8 மணி நேரம் 40 நிமிடத்தில் இவர் 36 கி.மீ தூரம் நீந்தி மதியம் 12.30 மணியளவில் மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியை வந்தடைந்தார்.
இந்த நிகழ்ச்சியை, மகாராஷ்டிரா நீச்சல் சங்கம், மத்திய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் உடல் தகுதி இந்தியா இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தியது.
ஜியா ராய்க்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் நேற்று நடைப்பெற்றது.
மும்பை நீர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் திருமிகு. ஜரிர் என் பாலிவாலா பரிசு கோப்பையை வழங்கி கவுரவித்தார்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி, ஜியா ராய், எலிபென்டா தீவில் இருந்து கேட்வே ஆப் இந்தியா வரை, 14 கி.மீ தூரத்தை 3 மணி நேரம் 27 நிமிடங்களில் நீந்தி கடந்தார்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர், கடலில் 14 கி.மீ தூரம் நீந்தி கடந்தது உலக சாதனையாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT