Published : 18 Feb 2021 01:34 PM
Last Updated : 18 Feb 2021 01:34 PM
டெல்லி மெட்ரோ ரயிலை கட்டமைத்து ‘மெட்ரோ மேன்’ என பெயர் பெற்ற ஸ்ரீதரன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரளாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடக் கூடும் எனவும் தெரிகிறது.
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்திலுள்ள வரவூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். தற்போது 88 வயதாகும் அவர் பொறியியல் படித்தவர். கடந்த 1954-ம் ஆண்டு இந்திய ரயில்வே பணியில் சேர்ந்தார்.
1964-ம் ஆண்டு ராமேஸ்வரத்தைத் தாக்கிய பெரும்புயலில் பாம்பன் பாலம் காணாமல் போனது. தமிழ்நாட்டிலிருந்து ராமேஸ்வரம் தீவு துண்டிக்கப்பட்ட நிலையில் சேதமடைந்த பாம்பன் பாலத்தைச் சீரமைத்து, 46 நாள்களில் கட்டிக்கொடுத்து பெரும் பெயர் பெற்றவர் ஸ்ரீதரன். ரயில்வே துறையில் அடுத்தடுத்து அவர் செய்யத சாதனைகள் பெரும் புகழை அவருக்கு பெற்றுத் தந்தன.
மேலும் மலைகளைக் குடைந்து பிரமாண்டமான பாலங்களுடனும் உருவாக்கப்பட்ட கொங்கன் ரயில் பாதையையும் உருவாக்கியவர் ஸ்ரீதரன். தலைநகர் டெல்லியில் முதன்முறையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது அதற்கு தலைமை ஏற்றவர்.
இதுமட்டுமின்றி, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களின் நிர்வாகியாகவும் இருந்தார். இதனால் அவர் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் என்றே அழைக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஸ்ரீதரன் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக விஜய் யாத்திரா நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது ஸ்ரீதரன் பாஜகவில் இணைவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி கேரளாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீதரன் போட்டியிடக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT