Published : 23 Jun 2014 08:13 AM
Last Updated : 23 Jun 2014 08:13 AM
தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாக்க ரூ.18,000 கோடிக்கு ஆளில்லா விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா கடந்த 2004-ம் ஆண்டு முதல் ‘டிரோன்ஸ்’ எனப்படும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அந்த நாட்டின் வான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தவும் இந்த ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
2200 தீவிரவாதிகள் பலி
கடந்த 2004-ம் ஆண்டு முதல் இது வரை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நுழைந்து அமெரிக்கா 369 முறை ‘டிரோன்’ தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 2200-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த 11-ம் தேதி பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா நடத்திய ‘டிரோன்’ தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படும் இந்த ஆளில்லா விமானங்களை அதிக அளவில் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்திய விமானப் படையில் சில ஆளில்லா விமானங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன.
கண்காணிப்புப் பணிகள்
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் போக முடியாத பகுதிகள், பாகிஸ்தான், சீனா எல்லைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மட்டும் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத் தப்படுகின்றன. வேவு பார்த்தல், ஆள் நடமாட்டம், தொலைவில் இருந்து தாக்குதல் ஆகிய பணிகளுக்கும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சீனாவும் ஆளில்லா விமானங்களை வாங்குவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறது. அமெரிக்காவிடம் உள்ள அனைத்து ரக ஆளில்லா விமானங்களையும் சீனா வாங்கி குவித்துள்ளது. சமீபத்தில் இந்திய எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானங்களை இயக்கி சீனா சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துவரும் இத்தகைய விமானங்களை இந்திய பாதுகாப்புத் துறையில் அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் 1000 ஆளில்லா விமானங்களை ரூ.18,000 கோடி செலவில் வாங்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான செயல் திட்டங்களை வகுக்கும் பணியில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வரும் செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும்போது ஆளில்லா விமானங்கள் வாங்குவது குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தியாவுடன் இணைந்து ஆளில்லா விமானங் களை தயாரிப்பதிலும் அமெரிக்கா ஆர்வம் காட்டியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சமீபத்தில் இதை வெளிப்படுத்தி உள்ளனர்.
அமெரிக்கா ஆர்வம்
இந்திய ராணுவ ஆராய்ச்சி மையம் (டிஆர்டிஓ) ஏற்கனவே லக்சயா, நிஷாந்த் என்ற இரண்டு ரக ஆளில்லா விமானங்களை தயாரித்து வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது. அதன் படி உள்நாட்டு தயாரிப்புகளையும் அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை அதிகமானால் உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு, நாட்டின் 7500 கி.மீ. கடற்கரைப் பகுதிகளை பாதுகாப்பது ஆகியவற்றுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT