Published : 16 Feb 2021 03:11 PM
Last Updated : 16 Feb 2021 03:11 PM
மத்தியப் பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பெண்கள் உள்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சித்தி நகரிலிருந்து சாட்னா நோக்கி ஒரு பேருந்து இன்று காலை சென்றது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பாட்னா கிராமம் அருகே, ராம்பூர் நாயக் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை 8.30 மணி அளவில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்திலிருந்து கீழே இருக்கும் மிகப்பெரிய கால்வாய்க்குள் விழுந்தது.
கால்வாயில் தண்ணீர் அதிகமாகச் சென்றதில் பேருந்து ஏறக்குறைய மூழ்கியது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் அதிகமாகக் கால்வாயில் ஓடியதால், தண்ணீரின் அளவைக் குறைத்த பின்புதான் மீட்புப் பணியில் ஈடுபட முடிந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேர் கால்வாயில் நீந்தி உயிர் தப்பினர்.
ரேவா, சாட்னா, சிங்ராலி ஆகிய இடங்களில் இருந்து மீட்புப் படையினர் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 37 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேவா மாவட்ட மண்டல ஆணையர் ராஜேஷ் ஜெயின் கூறுகையில், “இதுவரை 16 பெண்கள் உள்பட 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகக் தெரிகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து அறிந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மீட்புப் பணிகளை விரைவாகச் செய்யுமாறும், காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டார். விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இந்த விபத்து குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி அரசு சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டதையடுத்து, அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT