Last Updated : 15 Feb, 2021 03:12 AM

3  

Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்தின் பின்னணி: ‘இந்து தமிழ்’ கணிப்பின்படி, மேடையில் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி

தேவேந்திரகுல வேளாளர் எனப் பெயர் மாற்றம் பெற்றதில் பல ருசிகர பின்னணி இடம் பெற்றுள்ளது. ’இந்து தமிழ்’ நாளிதழ் கணிப்பின்படி சென்னை உரையில் பிரதமர் மோடி இதை நேற்று குறிப்பிட்டு பேசினார்.

தமிழகத்து சமூகங்களின் பலபெயர்கள் இந்திய அரசியலமைப் புச் சட்டங்களில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக புகார்கள் உள்ளன. இந்தவகையில், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி மற்றும் வாதிரியான் ஆகிய ஏழு உட்பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன. இவர்களை ‘தேவேந்திரகுல வேளாளர்’ என ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டி முறையான நடவடிக்கைகளை முதன்முதலில் எடுத்தவர் மதுரையை சேர்ந்த எம்.தங்கராஜ். தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளையின் தலைவரான இவர், தன் சமூகத்தின் கோரிக்கையை முன்னெடுத்ததன் பின்னணியில் பல ருசிகர சம்பவங்கள் இடம்பெற்றது தெரிந்துள்ளது.

பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் (ஆர்எஸ்எஸ்) முன்னாள் மாவட்டப் பிரச்சாரகரான தங்கராஜ் இதை, கடந்த 2007-ல் எழுப்பத் துவங்கி உள்ளார். பாஜகவின் தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா, 2016-ல் மதுரை வந்தபோது அவரை தங்கராஜ் சந்தித்து மனு அளித்துள்ளார்.

தொடர்ந்து அவருக்கு அச்சமூகத்தினர் நூறு பேருடன் 2016-ல் பிரதமர் மோடியை அவரது அரசு இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு இதுவரை எவருக்கும் கிடைக்காத வரவேற்பு 100 பேருடன் வந்த தங்கராஜுக்கு கிடைத்துள்ளது. பிரதமரின் வீட்டு நுழைவு வாயிலில் இருந்து வரவேற்பறை வரை தங்கராஜ் மிகவும் மதிப்புடன் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இங்கு சுமார் 40 நிமிடம் தங்கராஜ் விளக்கியதை பொறுமையுடன் அமர்ந்து கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி. பின்னர் அவர்களுக்கு பிரதமர் விருந்தும் அளித்துள்ளார்.

பின்னர் அவர்களது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக பிரதமர் கருதியுள்ளார். இதனால்,அதை தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு இந்த பெயர் மாற்ற சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் எம்.தங்கராஜ் கூறும்போது, "1892-ம் ஆண்டு முதலாகவும், திராவிடக் கொள்கையிலும் கூறுவதன்படி சாதிகள் இல்லை எனக் கூற முடியாது. இவற்றை, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்க்கப்படுவது தவறு. இதற்கான அரசு குறியீடுகளை சாதியின் அடிப்படையில் பார்க்காமல் அவற்றை இடஒதுக்கீட்டில் பார்ப்பது மோசமான அணுகுமுறை போன்ற கருத்துக்களை நான் பிரதமரிடம் எடுத்துரைத்தது அவரை மிகவும் கவர்ந்தது. இதுபோன்ற பிரச் சினைகளில் ஆதாரங்களுடன் அரசாங்காத்தை முறையாக அணுகாமல், வெறும் வாய்வழியாக பேசுவதில் எந்த பலனும் இல்லை என்பதற்கு இந்த பெயர்மாற்ற மசோதா ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மற்றொரு கோரிக்கையான தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முறையான மனுவை இன்னும் அரசிடம் அளிக்கவில்லை. பெயர்மாற்றம் முடிந்த பின் அதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம்“ என்று தெரிவித்தார்.

இதனிடையே, தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயர் மாற்ற ஷரத்து அடங்கிய சட்டதிருத்த மசோதா மீதான செய்தி நேற்று ’இந்து தமிழ்’ நாளேட்டில் மட்டுமே வெளியானது. அதில், கூறப்பட்டது போலவே சென்னை வந்த பிரதமர் தனது உரையில் இந்த மசோதாவை பற்றி விரிவாகப் பேசி இருந்தார்.

இதன்மூலம், பிரதமரின் உரையில் இடம்பெறுவதை ‘இந்து தமிழ்’ முன்கூட்டியே கணித்து எழுதியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x