Published : 02 Nov 2015 07:52 PM
Last Updated : 02 Nov 2015 07:52 PM
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜிதன்ராம் மாஞ்சி கட்சியின் தேர்தல் சின்னமான தொலைபேசியை பலரும் அடையாளம் காண முடியாமல் போனதால் வேறு கட்சிக்கு வாக்களித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செய்தி, கடந்த அக்டோபர் 12 முதல் துவங்கிய ஐந்து கட்ட தேர்தலில் நான்கு முடிந்த நிலையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சுமார் பத்து வருடங்களாக நாட்டின் மூலை முடுக்குகளிலும் செல்பேசிகள் நிறைந்துவிட்டது. இதனால், மத்திய அரசின் தொலைபேசித் துறையினரால் வீடுகளில் பொருத்தப்பட்ட தொலைபேசி வெகுவாகக் குறைந்து விட்டது. அதிலும், இந்த தொலைபேசி இருந்தபோது தற்போது செல்பேசிகள் நிறைந்துவிட்ட அளவிற்கு அதன் எண்ணிக்கைகள் இருந்ததில்லை. குறிப்பாக கிராமப்புற வீடுகளில் அதிகமாக இருந்ததில்லை.
இந்த நிலையில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த தொலைபேசி, மாஞ்சி கட்சியின் தேர்தல் சின்னமாக கிடைத்திருந்தது. இதன் உருவத்தை பிஹார் குடிமக்கள் பலராலும் அடையாளம் காண முடியாமல் போய் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புரத்தின் இளைஞர் மற்றும் பெண்களால் அடையாள காண முடியாமல் போய் உள்ளது.
இது குறித்து பிஹார் மாநில அரசியல் விமர்சகரான அசோக் பிரியதர்ஷன் 'தி இந்து'விடம் கூறுகையில், "வீடுகளில் பொருத்தப்படும் தொலைபேசி, புதிய வாக்காளர்களுக்கு அறிமுகம் இல்லாதது. இதனால், அவரது வாக்காளர்கள் பலராலும் தேர்தல் நாளின்போது மாஞ்சியின் சின்னத்தை அடையாளம் காண முடியாமல் போய் இருக்கிறது. மாஞ்சி கட்சியின் வேட்பாளர்கள் தம் தொகுதிகளில் தீவிர பிரச்சாரங்களையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் முழுக்க, முழுக்க பிரதமர் நரேந்தர மோடியின் பிரச்சாரத்தையே நம்பி இருந்து விட்டனர்" எனத் தெரிவித்தார்.
ஜனதாவில் இருந்து பிரிந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் எனும் பெயரில் லாலு பிரசாத் யாதவ், தான் துவக்கிய புதிய கட்சியின் தேர்தல் சின்னமான லாந்தர் விளக்கை எல்லா பிரச்சாரக் கூட்டங்களிலும் தன்னுடன் எடுத்து சென்றிருந்தார். பல மேடைகளில் அதை காட்டியும் பிரச்சாரம் செய்தார். இதை, புதிய கட்சியான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவின் தலைவரான மாஞ்சி அப்படி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த தொலைபேசி, தன் கட்சிக்கு சின்னமாக ஒதுக்கப்பட்டபோதும் அதை மாற்றுவதில் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டதாகவும், இதன் விளைவு பிஹார் சட்டசபை தேர்தல் முடிவுகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹாரில் புதிய கட்சியை துவங்கி முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் மாஞ்சி, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி உறுப்பினராக இருக்கிறார். இதன் சார்பில் மாஞ்சிக்கு பிஹாரில் மொத்தம் உள்ள 243-ல் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT