Last Updated : 12 Feb, 2021 12:06 PM

33  

Published : 12 Feb 2021 12:06 PM
Last Updated : 12 Feb 2021 12:06 PM

இந்திய எல்லையை யார் விட்டுக்கொடுத்தார்கள் என உங்கள் தாத்தாவிடம் கேளுங்கள்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதிலடி

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

இந்திய எல்லைப் பகுதியை சீனாவிடம் யார் விட்டுக்கொடுத்தார்கள் என உங்கள் தாத்தாவிடம் (முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு) ராகுல் காந்தி கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதிலடி கொடுத்தார்.

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையிலான மோதல், மற்றும் இருதரப்பு ராணுவத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் நேற்று விளக்கம் அளித்தார்.

இந்தியாவின் எல்லைப்பகுதி எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. இருதரப்பு ராணுவமும் பாங்காங் ஏரியின் தெற்கு, வடக்கு கரையிலிருந்து விலகிச் செல்ல ஒப்பந்தம் செய்துள்ளன என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில், “ இந்தியாவின் எல்லைப்பகுதியை சீன ராணுவத்துக்கு பிரதமர் மோடி விட்டுக்கொடுத்துவிட்டார். ஃபிங்கர்-4 பாயின்ட் என்பது இந்தியாவின் எல்லை.

அங்குவரை நமது எல்லைப்பகுதியாக பயன்படுத்தி வருகிறோம். இப்போது நாம் ஃபிங்கர்-4 பாயின்ட் பகுதியிலிருந்து ஃபிங்கர்-3 பாயின்ட் பகுதிக்கு நகர்கிறோம்.

எதற்காக இந்தியாவின் எல்லைப்பகுதியை சீன ராணுவத்துக்கு பிரதமர் மோடி விட்டுக் கொடுத்தார். இந்த கேள்விக்கு பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளி்க்கையில் “ இந்திய எல்லையை சீனாவிடம் யார் விட்டுக்கொடுத்தது என்று ராகுல் காந்தி அவரின் தாத்தாவிடம் கேட்க வேண்டும். அப்போது ராகுல் காந்திக்கு பதில் கிடைக்கும். யார் தேசப்பற்றாளர்கள். தேசப்பற்றில்லாதவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்” எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் ராகுல் காந்தி பேச்சு குறித்து கூறுகையில், “ இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும், எப்படி பதிலடி கொடுப்போம், என்பதை பாஜக தலைமையிலான மத்திய அரசு அண்டை நாடுகளுக்கும், தெற்கு, மேற்கு எல்லையில் உள்ள நாடுகளுக்கும் வெளிப்படுத்திவிட்டது,

இதை உலகமும் பார்த்துவிட்டது. ராகுல் காந்தி எதையும் புரிந்து கொள்ளவும் இல்லை, புரிந்து கொள்ள முயற்சிக்கவும் . ராகுல் காந்தியின் பேச்சு நாகரீகமில்லாதது, முதிர்ச்சியற்றது. ” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x