Published : 12 Feb 2021 11:26 AM
Last Updated : 12 Feb 2021 11:26 AM
இந்திய எல்லைப் பகுதிகளை சீனாவுக்கு ஏன் பிரதமர் மோடி விட்டுக்கொடுத்தார் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இதற்கு பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையிலான மோதல், மற்றும் இருதரப்பு ராணுவத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் நேற்று விளக்கம் அளித்தார்.
அப்போது, "இந்தியாவின் எல்லைப்பகுதி எதையும் சீனாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை. இருதரப்பு ராணுவமும் பாங்காங் ஏரியின் தெற்கு, வடக்கு கரையிலிருந்து விலகிச் செல்ல ஒப்பந்தம் செய்துள்ளன" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, இந்தியாவின் எல்லைப்பகுதியைசீன ராணுவத்துக்கு பிரதமர் மோடி விட்டுக்கொடுத்துவிட்டார் என்று குற்றம்சாட்டினார்.
இது குறித்து ராகுல்காந்தி பேசியதாவது:
கிழக்கு லடாக் எல்லை தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எந்தவிதமான வெட்கமும் இல்லாமல், இரு அவைகளிலும் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய ராணுவம் ஃபிங்கர்-3 பாயின்ட்டுக்கு செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.
ஃபிங்கர்-4 பாயின்ட் என்பது இந்தியாவின் எல்லை. அங்குவரை நமது எல்லைப்பகுதியாக பயன்படுத்தி வருகிறோம். இப்போது நாம் ஃபிங்கர்-4 பாயின்ட் பகுதியிலிருந்து ஃபிங்கர்-3 பாயின்ட் பகுதிக்கு நகர்கிறோம். எதற்காக இந்தியாவின் எல்லைப்பகுதியை சீன ராணுவத்துக்கு பிரதமர் மோடி விட்டுக்கொடுத்தார். இந்த கேள்விக்கு பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டும்.
இந்திய ராணுவத்தினர் கடினமாகப் போரிட்டு பிடித்த கைலாஷ் ரேஞ்ச் பகுதியைவிட்டு ஏன் பின்னோக்கி நகர வேண்டும். இதற்கு விளக்கம் அளியுங்கள். அங்கே, இந்திய ராணுவம் திரும்பிச் செல்ல வேண்டும்.
மிக முக்கியமாக நிலையாக இருக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்த பகுதியிலிருந்து சீன ராணுவம் ஏன் வெளியேற மறுக்கிறது. இதுதான் என்னுடைய கேள்வி. கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து சீன ராணுவம் வெளிேயற மறுக்கிறது.
நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு இருக்கிறது. ஆனால், இந்திய எல்லைப் பகுதியை பிரதமர் மோடி சீனாவுக்கு தாரை வார்த்துவிட்டார், சீனாவுக்கு பிரதமர் மோடி அடிபணிந்து சென்றுவிட்டார் .
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவின் நிலைப்பாடு என்பது எல்லைப்பகுதியில் ஏற்கெனவே இருக்கும் நிலையில் மாற்றம் இருக்கக்கூடாது என்பதுதான். இதற்காகத்தான் இத்தனை மாதங்கள் பேச்சு நடந்தது.
சீன ராணுவத்தை எதிர்த்து நிற்க முடியாத கோழையாக பிரதமர் இருக்கிறார். நம்முடைய வீரர்களின் தியாகத்தை மதிக்கவில்லை. நம்முடைய வீரர்கள் செய்த தியாகத்துக்கு துரோகம் செய்துவிட்டார். இந்தியாவில் உள்ள யாரும் அந்தப் பகுதிக்குள் செல்ல முடியாது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT