Published : 12 Feb 2021 09:02 AM
Last Updated : 12 Feb 2021 09:02 AM
நாட்டில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நிறைவடைந்தவுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேற்கு வங்கத்தில் குடியுரிமை இல்லாமல் தவிக்கும் மத்துவா சமூகத்துக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தாக்கூர் நகரில் நேற்று நடந்த கூட்டத்தில் மத்துவா சமூகத்தினர் கலந்துகொண்ட கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
''மேற்கு வங்கத்தில் நடக்கும் போரில் மம்தா பானர்ஜி ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் அல்லது பாஜக வலிமை பெற்று தங்க வங்கமாக மாற வேண்டும். இந்தப் போர் கிழக்கு இந்திய எல்லைகளை வலிமைப்படுத்தி சட்டவிரோதமாக நாட்டுக்குள் புகுந்தவர்களை வெளியேற்றுவதாகும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமை இல்லாமல் தவிக்கும் மத்துவா சமூகத்துக்கு சிஏஏ சட்டம் மூலம் குடியுரிமை வழங்கப்படும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரைக் குழப்புகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினரின் குடியுரிமை எந்த பாதிப்பும் ஏற்படாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவோம் என 2018-ம் ஆண்டு மோடி அரசு உறுதி அளித்தது. அதன்படி 2019-ம் ஆண்டு அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது.
நாட்டில் கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பாதிப்பால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. மம்தா பானர்ஜி மக்களிடம் பொய் கூறுகிறார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை முதலில் எதிர்த்து அவர், பின்னர் அதை அமல்படுத்த அனுமதிக்க முடியாது என்றார். ஆனால், பாஜக நிச்சயம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அகதிகளுக்குக் குடியுரிமையை வழங்கும்.
நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும்போது அதை எதிர்க்கும் நிலையில் மம்தா இருக்கமாட்டார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்படும்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இருக்கும் மத்துவா சமூகத்தினர் வங்க தேசத்திலிருந்து வந்த இந்துக்கள். இந்தச் சமூகத்தில் பலருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டாலும், இன்னும் ஏராளமானோருக்கு வழங்கப்படவில்லை. ஏறக்குறைய 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 30 லட்சத்துக்கும் மேலான மத்துவா மக்கள் வசிக்கிறார்கள். குறிப்பாக நாதியா, வடக்கு, தெற்கு 24 பர்கானா மாவட்டங்களில் அதிகமாக வசிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT