Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிபிஐயிடம் 588 வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குஅளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் 2020 வரையில் 588 வழக்குகள் சிபிஐ வசம் நிலுவையில் இருந்தது. இது, அதற்கு முன்பு டிசம்பர் 2019-ல் 711 ஆக இருந்தது. இவற்றில் அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் 6 ஆகும்.
நிலுவை வழக்குகளில் பெரும்பாலானவை சிபிஐ தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்குகள். இவை, அரசு அதிகாரிகள், வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மீதானவை.
நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகி உள்ள இவ்வழக்குகளின் மீது சட்ட ஆலோசனை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கரோனா பரவல் காரணமாகவும் வழக்குகளின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டன. எனினும், அவ்வழக்குகளின் முக்கியத்துவ அடிப்படையில் அனைத்தும் சிபிஐயால் விசாரணைக்கு உள்ளாகி வருகிறது" என்றார்.
இது தொடர்பான ஒரு துணைக்கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில், “கடந்த டிசம்பர் 2020 வரையிலான கணக்கெடுப்பின்படி, சிபிஐயில் 1,374 பணியிடங்கள் காலியாக இருந்தன. மொத்தம் உள்ள 7,273 பணியிடங்களில் 5,899 நிரப்பப்பட்டு விட்டன. இவற்றில் 5,000 உயர் பதவிகளில் 4,171-ல் அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT