Published : 11 Feb 2021 02:49 PM
Last Updated : 11 Feb 2021 02:49 PM
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கரோனா பாதிப்புக்கு முந்தைய சூழலுக்கு திரும்புவதற்கு 3 ஆண்டுகள் தேவைப்படும் என்று ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார், பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
2021-22ம் ஆண்டு பட்ஜெட் குறித்த விவாதம் மாநிலங்களவையில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று பேசியதாவது:
நான் கடந்த ஆண்டு பொருளாதார நிலையை நினைவுபடுத்துகிறேன். முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் , கரோனாவுக்கு முந்தைய இந்தியப் பொருளாாரம் ஐசியுவில் இருக்கிறது என்றார். நோபல் பரிசாளர் அபிஜித் பானர்ஜி, கரோனாவுக்கு முந்தைய இந்தியப் பொருளாதாரம் மோசமாக இருக்கிறது என்றார். கடந்த 8 காலாண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்து வந்தது.
ஆனால், மத்திய அரசோ நாட்டின் பொருளாதார மந்தநிலை என்பதை ஏற்க மறுத்தது. பொருளாதாரத்தில் மந்தநிலை என்பது சுழற்சியால் வருவது என்று தவறாக நம்பிக் கொண்டிருந்தது. ஆனால், உண்மையில் கட்டமைப்பில் ஏற்பட்ட தவறு என்பது உணரவில்லை. கரோனா வைரஸுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே பொருளாதார மந்தநிலை வந்துவிட்டது.
பொருளாதாரத்தில் அடிப்படைப் பிரச்சினைகளை, சிக்கல்களைத் தீருங்கள் என்று உங்களிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம். இரு விஷயங்களைச் செய்யுங்கள் என்று கூறினோம். ஒன்று மக்களின் கைகளில் நேரடியாகப் பணித்தை கொடுத்து செலவிடச் செய்யுங்கள், 2-வது, மலையாக உணவு தானியக் கிடங்குகளில் சேமித்துள்ள உணவு தானியங்களை இலவசமாக மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கிடுங்கள் என்றோம். ஏழைகள் கைகளில் பணத்தை கொடுக்கவில்லை, ரேஷனும் தொடரவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர்.
பொருளாதாரத்தை மேம்படுத்த சப்ளை பக்கத்தை மட்டுமே அரசு கவனித்தது, சப்ளை பக்கம் விரைவில் சரியாகும் என அரசு நம்பியது.இப்படியெல்லாம் யார் ஆலோசனை கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
ஆனால், பொருளாதார வல்லுநர்களோ தேவையை தூண்டிவிட்டால், ஊக்குவித்தால்தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றனர். ஆனால், மத்திய அரசு கடந்த 12 மாதங்களாக எந்த பாடத்தையும் கற்கவில்லை.
கரோனாவில் 6.40 கோடி மக்கள் வேலையிழந்துவிட்டார்கள். பெண்களில் 22 சதவீதம் பேருக்கு வேலையில்லை. 2.80 கோடி மக்கள் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். சிறுகுறு, நடுத்தர தொழில்கள் பல மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் தேவையின் பகுதி குறைந்து வருகிறது. வளர்ந்த மாநிலங்களான தமிழகத்திலேயே தேவையில் பற்றாக்குறை என்றால், பிற்படுத்தப்பட்ட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பிஹார், ஒடிசாவில் கற்பனை செய்து பாருங்கள். மொத்த தேவையை நீங்கள் புறக்கணித்துவிட்டார்கள். நீங்கள் தாக்கல் செய்த பட்ஜெட் யாருக்கானது.
முதலீட்டுச் செலவு ரூ.51 ஆயிரம் கோடி என்றால் மற்ற பணம் எங்கு சென்றது. வருவாயின் பகுதியில் அரசின் செலவு ரூ.4 லட்சம் கோடிக்கு அதிகமாக இருக்கிறது. ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் பற்றாக்குறை இருக்கிறது. என்னுைடய வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள், அடுத்த ஆண்டு வருவாயிலும் பற்றாக்குறை இருக்கும்.
முதலீட்டு செலவினத்துக்கு செலவிடும்தொகை போதுமானது அல்ல. நீங்கள் பெறும் பணம் என்பது இடைவெளியே நிரப்புவதற்குத்தான் போதுமானதாக இருக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இயல்பில் 14.8 சதவீதமும், நிதியாண்டில் 11 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது மிகவும் குழப்பமாக இருக்கிறது.
சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் இந்தியப் பொருளதாாரம் கரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டுவதற்கு 3 ஆண்டுகள் தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8 முதல் 9 வரை இருக்கும். கரோனா வைரஸ் பாதிப்புக்குப்பின் எந்த விதமான பொருளாதார வளர்ச்சி இருந்தது.
ஆதலால், பொருளாதார வளர்ச்சிக்கான எண்களை உயர்வாகக் காட்டாதீர்கள். நிலையான பொருளாதார வளர்ச்சி வருவதற்கு 3 ஆண்டுகள் ஆகும். இந்த ஆலோசனைகளை ஏற்று, பொருளாதாரத்தின் அடிப்படைகட்டமைப்பில் உள்ள பிரச்சினைகளை களையுங்கள், ஏழைகளுக்கு உதவுங்கள்.
பாதுகாப்புத்துறை குறித்து இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை என்பது வரவேற்கிறேன். சுகாதாரத்துறைக்கு முழுவதுமாக பட்ஜெட்டில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் என்பது பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட். தேசத்தில் உள்ள ஏழைகளுக்காக, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, ரேஷன் பொருட்களுக்காக காத்திருக்கும் மக்களுக்காக ஏதும் இல்லை.
இந்த நேரத்தில் நம்முடைய கடும் எதிர்ப்பை, போராட்டத்தை பதிவு செய்தாக வேண்டும். ஏனென்றால், எதிர்ப்பாளர்களான எங்களை அந்தோலன்ஜீவி என்று அழைக்கிறார்கள். மக்களின் பட்ஜெட் என நீங்கள் அழைப்பதை மறுக்கிறோம். ஏழைகளுக்கு பணம் கொடுங்கள், ரேஷன் கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாவிட்டால், ஏழைகள் விழித்துக் கொள்வார்கள். அமைதியான முறையில் போட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT