Published : 11 Feb 2021 12:19 PM
Last Updated : 11 Feb 2021 12:19 PM
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியன் தென்,வடகரைப் பகுதியிலிருந்து இந்தியா, சீனா ராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஒப்பந்தம் முடிந்துள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.
அதேநேரத்தில் எல்லைப்பகுதியில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் இரு தரப்பு நாடுகளுக்கு இடையிலான உறவில் மோசமான பாதிப்பு ஏற்படும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.
கிழக்கு லடாக்கில் உள்ள சூழல் குறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளித்தார்.அவர் பேசியதாவது:
இந்த அவையில் நான் மகிழ்ச்சியுடன் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். எல்லை பிரச்சினை தொடர்பாக சீன ராணுவத்துடன் இந்திய ராணுவம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இதன்படி பாங்காங் ஏரியின் வட மற்றும் தென்பகுதி கரையிலிருந்து இரு நாட்டு ராணுவமும் படிப்படியாக விலகிக்கொள்ள ஒப்பந்தம் முடிந்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்து இருதரப்பு ராணுவமும் படிப்படியாக, கூட்டுறவுடன் விலகிக்கொள்ளும்.
3 அடிப்படையான விஷயங்களை முன்வைத்து சீனாவிடம் இந்தியா தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. முதலாவது எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதியை மதிக்க வேண்டும். 2-வதாக எல்லைப்பகுதியில் ஏற்கெனவே இருக்கும் பகுதியை தன்னிட்சையாக மாற்றக்கூடாது, இருதரப்பிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டது.
பாங்காக் ஏரியிலிருந்து படைகள் விலகல் முடிந்த அடுத்த 48 மணிநேரத்தில் இரு நாட்டு ராணுவ மூத்த காமாண்டர்களுக்கு இடையே அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நிலுவையில் இருக்கும் மற்ற பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
சீனாவிடம் தொடக்கத்திலிருந்தே இந்தியா வலியுறுத்தியது என்னவென்றால், இருநாடுகளும் எடுக்கும் முயற்சியின் அடிப்படையில்தான் இரு நாட்டு உறவுகளும் தொடர்ந்து பராமரிக்கப்படும் . இருதரப்பும் அமைதியான பரஸ்பரத்துடன் பேச்சு நடத்தி எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி வந்தது.
அதேசமயம் எல்லைக் கட்டப்பாட்டுப்பகுதியில் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால், இருதரப்பு உறவில் மோசமான பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை சீனா நன்கு உணர்ந்திருந்தது.
எல்லையிலும், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் தொடர்ந்து அமைதி நீடிப்பது என்பது இருதரப்பு உறவுக்கும் முக்கியம் என்று பலமுறை நடந்த ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT