Published : 11 Feb 2021 09:00 AM
Last Updated : 11 Feb 2021 09:00 AM
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் முடிந்து இந்த மாதத்தோடு முடிவதையடுத்து, அடுத்த தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே இருவரின் பெயர்களும் பரிசீலக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் வரும் 15-ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 1990-ம் ஆண்டு மகாராஷ்டிராவிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் வரும் 15-ம் தேதி முடிவதையடுத்து, மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி அவருக்கு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தார்.
மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத் பேசுகையில், “உலகில் எந்த முஸ்லிம்கள் தங்களைப் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள் என்றால், அது இந்திய முஸ்லிம்களாகத்தான் இருக்க முடியும். கடந்த பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் முதல் ஈராக் வரை முஸ்லிம் நாடுகள் சிதைக்கப்பட்டு வருகின்றன என்பதைப் பார்த்து வருகிறோம். அங்கு இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இல்லை. இருப்பினும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்ற பரிசீலனை தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக ஆங்கில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் ப.சிதம்பரம் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் இந்தியைச் சரளமாகப் பேசமுடியாது என்பதால், அவரை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யும் சாத்தியங்கள் குறைவு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்தி சரளமாகப் பேசவரும் என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வீடு கார்கேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் சாத்தியங்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர மத்தியப் பிரதேச எம்.பி. திக்விஜய் சிங் பெயரும் பேசப்பட்டு வருகிறது.
மேலும், மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, கபில் சிபல் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராகக் கடிதம் எழுதிய 23 தலைவர்களில் இருவரும் இருக்கிறார்கள் என்பதால், எந்த அளவுக்கு இவர்கள் பெயர் முன்மொழியப்படும் எனத் தெரியவில்லை.
இதற்கிடையே ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்ட செய்தியில், கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3 எம்.பி.க்கள் ஓய்வு பெறுவதால், காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் ஒரு இடத்திலிருந்து குலாம் நபி ஆசாத்தைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT