Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM
கரோனா பாதிப்பிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்க அவசர கால கடன் உதவி திட்டத்தை (Emergency Credit Line Guarantee-இசிஎல்ஜி) மத்திய அரசு அறிவித்தது. இதன்படி ஜனவரி 25-ம் தேதி வரையான காலத்தில் மொத்தம் 91 லட்சம் கடன் உத்திரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்றுமுன்தினம் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலமாக அமைச்சர் கட்கரி அளித்த விவரம் வருமாறு: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் காப்பதற்கு மத்திய அரசு அவசர கால கடன்உத்திரவாத திட்டத்தை (இசிஎல்ஜி) அறிமுகம் செய்தது. இதன்படி ஜனவரி 25-ம் தேதி வரையான காலத்தில் மொத்தம் 91 லட்சம் உத்திரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் மொத்தம் 31,923 சிறு, குறு நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு 5,21,746 கடன் உத்திரவாத ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இவை, சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க உருவாக்கப்பட்ட நிதியம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
சுயசார்பு இந்தியாவை உருவாக்க கொண்டு வரப்பட்டுள்ள ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் அவசர கால கடன் உத்திரவாதத் தொகையும் அடங்கும்.
இது தவிர ஸ்டார்ட்அப்களை உருவாக்க தனி நிதியம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக சிட்பி வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வரையான காலத்தில் மொத்தம் 384 ஸ்டார்ட் அப்கள் ரூ. 4,509 கோடி முதலீட்டில் தொடங்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT