Published : 09 Feb 2021 09:22 AM
Last Updated : 09 Feb 2021 09:22 AM
மத்திய அரசு பணிகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 21 புதிய பிரிவுகளை அரசு சேர்த்துள்ளது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.
‘மல்லாகம்ப்’ மற்றும் ‘செபாக் தக்ராவ்’ உள்ளிட்ட 21 புதிய பிரிவுகளை மத்திய அரசு பணிகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டின் கீழ் அரசு சேர்த்துள்ளது என்று மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு இன்று கூறினார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த அவர், இந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்கள் இந்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ‘சி’ பிரிவு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று கூறினார்.
புதிதாக இணைக்கப்பட்டுள்ள விளையாட்டுகளின் விவரம் வருமாறு: பேஸ்பால், சைக்கிள் போலோ, ஃபென்சிங், மல்லாகம்ப், நெட் பால், பென்காக் சிலாட், ரோல் பால், செபாக் தக்ராவ், டென்பின் பௌலிங், டக் ஆஃப் வார், டென்னிஸ் பந்து கிரிக்கெட், பாடி பில்டிங், டெஃப் ஸ்போர்ட்ஸ், குடோ, மோட்டார் ஸ்போர்ட்ஸ், பாரா ஸ்போர்ட்ஸ், ஷூட்டிங் பால், ரக்பி, சாஃப்ட் டென்னிஸ், டிரையத்தலான் மற்றும் வுஷு ஆகும்.
விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், நாட்டில் விளையாட்டுகளின் தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கேலோ இந்தியா திட்டம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு உதவிகள், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவோர் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு சிறப்பு விருதுகள், தேசிய விளையாட்டு விருதுகள், திறன்மிகு வீரர்களுக்கு ஓய்வூதியம், பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய விளையாட்டு நல நிதி, தேசிய விளையாட்டு மேம்பாடு நிதி மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலம் பயிற்சி மையங்கள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக திரு ரிஜிஜூ கூறினார்.
மேற்கண்ட திட்டங்களை பற்றிய முழு விவரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் இருப்பதகாவும், 2017-18-ஆம் ஆண்டில் ரூ 1393.21 கோடி பல்வேறு விளையாட்டு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 2019-20-ஆம் ஆண்டு இது ரூ 2000 கோடியாக உயர்த்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT