Published : 08 Feb 2021 03:06 PM
Last Updated : 08 Feb 2021 03:06 PM
போராட்டத்தின் போதெல்லாம் இணையத்தை முடக்குவது இந்தியாவுக்கே அவமானம் என்று அரசியல் செயற்பாட்டாளரும் கட்டுரையாளருமான பூனாவாலா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை மூன்று மணி 'சக்கா ஜாம்' எனப்படும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது டெல்லி போராட்டம் நடைபெற்ற இடங்கள் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது இணையசேவைகளை நிறுத்திவைப்பது குறித்து அரசியல் செயற்பாட்டாளரும் கட்டுரையாளருமான பூனாவாலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் எ போப்டேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பூனாவாலா கூறியுள்ளதாவது:
எப்போதெல்லாம் மக்கள் போராட்டம் செய்கிறார்களோ அப்போதெல்லாம் அரசாங்கம் இணைய சேவையை தன்னிச்சையாக இடைநீக்கம் செய்துவிடுகிறது. தற்போது மத்தியில் ஆளும் அரசாங்கம் உலகிலேயே அதிக அளவில் இணையத் தடையில் ஈடுபட்டுள்ள சாதனையை இந்தியாவில் நிகழ்த்தியுள்ளது. இது ஒரு அவமானகரமான சாதனை ஆகும்.
போராட்டம் நடக்கும் போதெல்லாம் அரசாங்கத்தால் இணையத்தை தன்னிச்சையாக நிறுத்தி வைப்பது குறித்து ஒரு வழக்கை தாங்கள் தானாக முன்வந்து ஏற்று நடத்தும்படி வேண்டிக்கொள்கிறேன்.
இணையம் இன்று நம் வாழ்வின் ஓர் அங்கம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். மருத்துவ பதிவுகளிலிருந்து அன்றாட வாழ்வாதாரம் வரை, இன்றைய மனித வாழ்க்கையில் இணையம் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது.
தற்போதைய அரசாங்கமும் அவர்களின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தேசவிரோதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வெறுப்பு மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
இவ்வாறு தெஹ்ஸீன் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT