Published : 08 Feb 2021 01:38 PM
Last Updated : 08 Feb 2021 01:38 PM
விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்கள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டில் உள்ள சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டியதுதான் இந்த நேரத்துக்கு அவசியமானதாகும். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேளாண் துறையில் மாற்றங்களைக் செய்து வருகிறது.
இந்தியாவில் 68 சதவீத விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள். 12 கோடி விவசாயிகளிடம் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கிறது. இந்த 12 கோடி விவசாயிகளைப் பாதுக்காக்கும் அக்கறை எங்களுக்கு இருக்காதா. கடன் தள்ளுபடி சிறு விவசாயிகளுக்கு பலன்தராது.
அவர்கள் பெரும்பாலும் வங்கிகளை அனுகுவதில்லை. பெரும்பாலோனோருக்கு வங்கிக்கணக்குகூட இல்லை. பயி்ர் காப்பீடு திட்டத்தை கொண்டு வந்து சிறு விவசாயிகளை இணைத்துள்ளோம், ரூ.9ஆயிரம் கோடி பயிர்காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.
பயிர்காப்பீடு திட்டம் விவசாயிகள் எளிதில் அணுகும் விதத்தில் மாற்றப்பட்டுள்ளது.பிரதமர் கிசான் திட்டத்தை கொண்டு வந்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குகிறோம். இதுவரை 10 கோடி சிறு விவசாயிகளுக்கு ரூ.1.15 லட்சம் கோடி வழங்கியுள்ளோம். சிறு விவசாயிகளின் நலனுக்காகவே உழைக்கிறோம்.
விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்களை கொள்முதல் செய்யும் போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். கடந்த காலத்தில் இருந்து, இப்போதும் இருக்கிறது, எதிர்காலத்திலும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். மண்டிகள் நவீனப்படுத்தப்படும். ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளவேண்டும். வாருங்கள் ஒன்றாக அமர்ந்து பேசலாம். நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். இந்த அவையிலிருந்து உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். குறைந்த பட்ச ஆதார விலை தொடரும், யாரும் தவறான தகவல்களை பரப்ப முடியாது. நாம் முன்னோக்கி நகர வேண்டும், பின்னோக்கி செல்லக்கூடாது. இந்த சீர்த்திருத்தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு உதவுகின்றனர். சாலைகளை இணைக்கும் திட்டத்தின் மூலம் விவசாயிகள் எளிதாக தங்கள் விளை பொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்ல முடிகிறது. இதற்காகவே கிசான் ரயிலையும் அறிமுகம் செய்தோம். எங்கள் நோக்கம் சிறு விவசாயிகளை முன்னேற்றுவதுதான்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT