Published : 08 Feb 2021 10:08 AM
Last Updated : 08 Feb 2021 10:08 AM
உத்தரகாண்டில் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட ரிஷிகங்கா மின்திட்டம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, “ கங்கை நதியின் உப நதிகளின் குறுக்கே எந்தவிதமான அணையும் கட்டவேண்டாம் என நான் அன்றே எச்சரித்திருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அமைச்சசரவையில் நீர் வளம், ஆறு மேலாண்மை, கங்கை புத்தாக்கத்துறை அமைச்சராக உமா பாரதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இமயமலைப்பகுதியில் உள்ள ஜோஷிமடத்தில் நேற்று மிகப்பெரிய அளவில் பனிப்பாறை உடைப்பு ஏற்பட்டு பனிச்சரிவு நிகழ்ந்தது. இதனால், சமோலி மாவட்டத்தில் உள்ள அலாக்நந்தா, ரிஷிகங்கா ஆற்றில் ஆற்றில்திடீரென கட்டுக்கடங்கா வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதில் ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே 13.2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம்(தபோவன் அணை) முழுமையாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த மின்திட்டத்தில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. இதுவரை 16 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.
உத்தரகாண்ட் பனிச்சரிவு குறித்தும், தபோவன் அணை அடித்துச் செல்லப்பட்டது குறித்தும் அறிந்த பாஜக தலைவர் உமா பாரதி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்தில் “ இமயமலையில் பனிச்சரிவு ஏற்பட்டு, நீர்மின்திட்டத்தையே அடித்துச் சென்று, மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாக்கிவிட்டது. ரிஷிகங்கா ஆற்றில்தான் இந்த பெரிய துயரம் நடந்துள்ளது. நான் ஏற்கெனவே இந்த திட்டம் குறித்து எச்சரித்திருந்தேன்.
நான் அமைச்சராக இருந்தபோது, ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டம் கட்டுவது குறித்தும், இமயமலைப் பகுதியில் அணை கட்டுவது குறித்தும் நான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தேன். அதில், இமயமலைப் பகுதி மிகவும் ஆபத்தானது, இங்கு நீர்மின்திட்டம் கட்டக்கூடாது. அதிலும் கங்கை நிதியின் குறுக்கே, உபநதிகளின் குறுக்கே நீர்மின்திட்டங்கள் கட்டக்கூடாது என எச்சரித்தேன். மின்பற்றாக்குறை ஏற்பட்டால், தேசிய பகிர்மானத்தில் இருந்து மின்சாரத்தை பெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT