Last Updated : 08 Feb, 2021 09:38 AM

 

Published : 08 Feb 2021 09:38 AM
Last Updated : 08 Feb 2021 09:38 AM

உத்தரகாண்ட் பனிச்சரிவு: ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை; ஒட்டுமொத்தமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது 

ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுவந்த ரிஷிகங்கா மின்திட்டம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பகுதி: படம்ஏஎன்ஐ

புதுடெல்லி


உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் நேற்று பனிப்பாறை உடைந்து பெரும் பனிச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது.

இமயமலைப்பகுதியில் உள்ள ஜோஷிமடத்தில் நேற்று மிகப்பெரிய அளவில் பனிப்பாறை உடைப்பு ஏற்பட்டு பனிச்சரிவு நிகழ்ந்தது. இதனால், சமோலி மாவட்டத்தில் உள்ள அலாக்நந்தா, ரிஷிகங்கா ஆற்றில் திடீரென கட்டுக்கடங்கா வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதில் ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே 13.2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் ரிஷிகங்கா மின்திட்டம்(தபோவன் அணை) கட்டப்பட்டு வந்தது. மிகப்பெரிய அளவில் வந்த வெள்ளத்தில், இந்த மின்திட்டம் முழுமையாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மின்திட்டத்தில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. இதுவரை 16 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.

இந்நிலையில், பனிச்சரிவு ஏற்பட்டவுடன் ரிஷிகங்கா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த தபோவன் அணை அதாவது ரிஷிகங்கா மின்திட்டம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த அணையில் பணியாற்றியவர்கள் நிலைமைதான் தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது. அப்பகுதி முழுவதும் சேறுநிரம்பி இருப்பதால், மீட்புப்பணியில் ஈடுபடுவதும் சிக்கலாக மாறியுள்ளது.

அதேசமயம், நீரின்அளவு தற்போது முற்றிலுமாக குறைந்துவிட்டதால், கரைஓரத்தில் உள்ள கிராமங்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போனவர்களைத் தேடும் பணியில் ராணுவத்தினர், ராணுவத்தின் தொழில்நுட்பக் குழுவினர், இந்திய திபெத்திய படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்,தீயணைப்புத் துறையினர், போலீஸார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

காஜியாபாத்திலிருந்து கூடுதலாக 2 தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்திய விமானப் படையிலிருந்து, அதிநவீன லகுரக விமானம் ஐஏஎப் சி-130 ரக இரு விமானங்கள் மீட்புப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜோஷிமாத் பகுதிக்கு இரு ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x