Published : 08 Feb 2021 09:05 AM
Last Updated : 08 Feb 2021 09:05 AM
வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 70 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லியின் பல்ேவறு எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை 11 சுற்றுப்பேச்சு விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்து முடிந்துள்ள நிலையில், எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.
நாளுக்கு நாள் விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் போராடும் இடங்களில் போலீஸார், துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து பதற்றமான சூழல் காணப்பட்டுவருகிறது.
இந்நிலையில் புனே மாவட்டம், பாரமதி நகரில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 70 நாட்களாகப் போராடும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வேளாண் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை மூலம் தான் தீர்க்க முடியும்.
போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் பேச்சு நடத்தி, பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும். மும்பையிலிருந்து சென்ற அமைச்சர் பியூஷ் கோயலுக்கு , வேளாண்மையை பற்றி எவ்வளவு தெரியும் என எனக்குத் தெரியாது.
வேளாண் என்பது மாநில அரசுகளின் பட்டியலுக்குள் வந்துவிடும். இதுபோன்ற சட்டங்களை இயற்றும் முன், மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்துபேசிய பின் முடிவு எடுத்திருக்க வேண்டும்.
வேளாண் சட்டங்களில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து அதாவது வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இருந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
வேளாண்மை மாநிலப்பட்டியலில் இருப்பதால்தான் நான் வேளாண் அமைச்சராக இருந்தபோது, என்னுடைய காலத்தில் மாநில அரசுகளுடன் இதுபற்றி கலந்து பேசினேன். 9 மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் அமைச்சர்களைக் கொண்ட குழுவை மகாராஷ்டிரா அமைச்சர் ஹர்ஸவர்த்தன் பாட்டீல் தலைமையில் அமைத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய வைத்து, வரைவு சட்டத்தையும் கொண்டு வந்தோம்.
வரைவு மசோதாவை உருவாக்கி, மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து அது தொடர்பாக ஆலோசனை நடத்தக் கூறினோம். ஆனால் ஆளும் பாஜக அரசு தற்போது, சொந்தமாக சட்டம் இயற்றி, அதை நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பத்துக்கு இடையே, விவாதமின்றி நிறைவேற்றியுள்ளது.
நாடாளுமன்றத்தில் எந்தவிதமான விவாதங்களும் நடக்காததால், மாநிலங்களுக்கு இந்தச் சட்டத்தின் மீது நம்பிக்கையில்லை. தேவைப்படும்போது வேளாண் சீர்திருத்தங்கள் செய்யப்படும், கருத்துவேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்கக முடியும்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT