Published : 08 Feb 2021 07:58 AM
Last Updated : 08 Feb 2021 07:58 AM
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெய் ஸ்ரீராம் கூறி மக்கள் மம்தா பானர்ஜியை வழி அனுப்புவார்கள். மம்தாவின் ஆட்சியில் மக்கள் அன்பை எதிர்பார்த்தார்கள் ஆனால், மக்களுக்கு கொடூரமான ஆட்சிதான் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸ் முயன்று வருகிறது.
மம்தாவின் ஆட்சியை அகற்றிவிட்டு தங்கள் ஆட்சியை முதன்முதலாக நிறுவ பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்கிடைய காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைத்து காய் நகர்த்தி வருகிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் இப்போது இருந்தே தேர்தல்பரபரப்பு தொற்றிவிட்டது.
ஹால்டியா நகரில் எண்ணெய் எரிவாயு திட்டங்களையும், பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்ததாக பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நான் நம்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் அரசு பல்வேறு தவறுகளைச் செய்துவிட்டது. ஜெய் ஸ்ரீராம் கூறி மம்தாவை மக்கள் தேர்தலில் வழி அனுப்புவார்கள்.
திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு இடையே உள்ளார்ந்த கூட்டு, மேட்ச் பிக்ஸிங் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோசமான நிர்வாகம் இல்லாத மாநிலமாக பாஜக மாற்றும், உண்மையான மாற்றத்தை பாஜக வழங்கும். திரிபுராவில் அந்த மாற்றத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்
மத்திய அரசின் திட்டங்களான ஆயுஷ்மான் பாரத், பிஎம் கிசான் திட்டம் போன்றவற்றை மம்தா பானர்ஜி மாநிலத்தில் அமல்படுத்தவில்லை. பாஜக ஆட்சி அமைந்தவுடன், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்ற முடிவு எடுக்கப்படும்.
மம்தாவிடம் மக்கள் அன்பான ஆட்சியை எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரிடம் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக கொடூரமான ஆட்சிதான் கிைடத்தது. இடதுசாரிகளின் மோசமான ஆட்சியின் மறுபிறப்பு திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி. ஊழலின் மறுபிறப்பு, கிரிமினல்கள் ஆதிக்கம், வன்முறை, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது.
பாரத் மாதா கி ஜே என்ற கோஷத்தைக்கேட்டவுடன் ஏன் மம்தா பானர்ஜி கோபப்படுகிறார் எனத் தெரியவில்லை. உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மம்தா, நாட்டை அவமானப்படுத்த சதிகள் நடக்கும் போது, ஏன் மம்தா மவுனமாக இருக்கிறார்.
மேற்கு வங்கத்து மக்கள் ராம நாமத்தை உச்சரித்து வருகிறார்கள், ஜெய் ஸ்ரீராம் கூறி பாஜகவை வரவேற்பார்கள். திரிணமூல் காங்கிரஸ் அரசு வாரிசு அரசியல் இங்கு கொண்டுவரப் பார்க்கிறது.
பிஎம் கிசான் தி்ட்டம் மூலம் இதுவரை 10 கோடிக்கும்அதிகமான சிறு விவசாயிகளுக்கு ரூ.1.15 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 25 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் இந்ததிட்டத்தில் சேர விண்ணப்பித்தும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. விவசாயிகளுக்கு எதிரியாகச் செயல்படுகிறாரா மம்தா பானர்ஜி.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT