Published : 07 Feb 2021 01:31 PM
Last Updated : 07 Feb 2021 01:31 PM
விவசாயிகளுக்காக குரல் கொடுக்க ராகுல் காந்தி ராஜஸ்தானுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டடம் நடைபெற்று வருகிறது.
இதன் எதிரொலியாக ராஜஸ்தானிலும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியின் எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவளிக்க ராஜஸ்தானின் தவுசாவில் கிசான் மகாபஞ்சாயத்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மூன்று புதிய பண்ணை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், ''இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு முன்பு மாநில அரசுகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளுடன் மத்திய அரசு விவாதிக்கவில்லை .
புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்க அடுத்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அஜய் மக்கான் தனது ட்விடடர் பதிவில் இதுகுறித்து கூறியுள்ளதாவது:
"விவசாயிகளின் நலன்களுக்காகப் போராட, மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான போராட்டத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுக்க ராகுல் காந்தி வரும் பிப்ரவரி 12-13 அன்று ராஜஸ்தானில் இருப்பார்.''
இவ்வாறு அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT