Published : 07 Feb 2021 12:08 PM
Last Updated : 07 Feb 2021 12:08 PM
சாலையில் ஓட்ட தகுதியற்ற பழைய வாகனங்களை நிராகரிப்பதால் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மஹராஷ்டிரா மாநிலத்திற்கு வருகை தந்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வார்தாவில் நடைபெற்ற பட்ஜெட் 2021 குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
மகாத்மா காந்தி கிராமிய தொழில்மயமாக்கல் நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வசதிகளை அமைக்க மத்திய சிறு, குறு நடுத்தர தொழில்துறைகளுக்கான அமைச்சகத்தால் ரூ .50 கோடி ஒதுக்கப்பட உள்ளன.
மத்திய அரசால் தொடங்கப்பட்ட புதிய நடவடிக்கைகள் காரணமாக வரும் ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்.
மகாராஷ்டிராவின் சிந்தி நகரில் ஒரு தளவாட பூங்கா அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் கான்கரின் உலர் துறைமுகத்தின் பணிகளும் முன்னேறி வருகின்றன.
பயன்பாடில்லாத பழைய வாகனங்களை நாம் ஒதுக்கித்தள்ளவேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுவரும் வாகனங்கள் எரிபொருள் திறன் கொண்டவை அல்ல, அதிக பராமரிப்புச் செலவுகளையும் கொண்டிருக்கின்றன, இத்தகைய வாகனங்களை நிராகரிக்கும் கொள்கையே இந்த சிக்கல்களை சமாளிக்க உதவும்.
மத்திய அரசின் பட்ஜெட் 2021ல் கூறியபடி மக்கள் தானாக முன்வந்து ஓட்டத் தகுதியற்ற பழைய வாகனங்களை நிராகரிப்பதன்மூலம் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதோடு, வாகன பாகங்களின் விலை 40 சதவீதமாகக் குறைக்கவும் உதவும்.
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT