Last Updated : 07 Feb, 2021 11:31 AM

 

Published : 07 Feb 2021 11:31 AM
Last Updated : 07 Feb 2021 11:31 AM

ஆந்திர மாநில எல்லையோரம் பர்கூர் அருகே கண்டெய்னர் லாரியில் தீ விபத்து: 150 பண்டல் துணிகள் எரிந்து நாசம்

படவிளக்கம்: கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள காளிக்கோயில் என்னுமிடத்தில் 150 பண்டல் துணிகளை ஏற்றிச் சென்ற லாரி தீ பிடித்து எரிந்தது.

கிருஷ்ணகிரி

பர்கூர் அருகே கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 150 பண்டல் துணிகள் எரிந்து நாசமானது.

திருப்பூரில் இருந்து டெல்லிக்கு 150 பண்டில் துணிகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு நேற்று (6ம் தேதி) டெல்லி நோக்கி லாரி புறப்பட்டது.

லாரியை, பிஹார் மாநிலம் ரூபீடகா கிராமத்தைச் சேர்ந்த மகபூப் மகன் சவுகின்(27) என்பவர் ஓட்டி சென்றார். லாரி கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோவில் அருகிலுள்ள துரை ஏரி பேருந்து நிறுத்தம் அருகே நள்ளிரவு 12 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, இந்த லாரியின் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள், அந்த லாரியில் இருந்து புகை வருவதை கண்டனர்.

பின்னர், லாரியை முந்திச் சென்று ஓட்டுநரிடம் தெரிவித்தனர். இதையடுத்து லாரியை ஓட்டிச் சென்ற சவுகின், சாலையோரம் லாரியை நிறுத்தி பார்த்த போது, கண்டெய்னரில் இருந்து அதிக அளவில் புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி அலுவலர் ராமச்சந்திரன், பர்கூர் நிலைய அலுவலர் செங்குட்டுவேலு, கிருஷ்ணகிரி, பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 வாகனங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் வாகனத்தில் இருந்து துணிகள் முழுவதும் எரிந்து நாசமானது.

இதன் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக அங்கு வந்த கந்திகுப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிரஞ்சீவிகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சசிக்குமார் மற்றும் போலீஸார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x